search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகாடு அருகே ஹைட்ரோ கார்பன் திட்ட கழிவு தொட்டி மூடப்பட்டது
    X

    வடகாடு அருகே ஹைட்ரோ கார்பன் திட்ட கழிவு தொட்டி மூடப்பட்டது

    வடகாடு அருகே ஹைட்ரோ கார்பன் திட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கழிவு வெளியேறி தேங்கிய தொட்டி மூடப்பட்டது.
    வடகாடு:

    புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கல்லிக்கொல்லை, வானக்கண்காடு மற்றும் கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து ஆய்வு மேற்கொண்டது. இந்தநிலையில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் 2 கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டாம் கட்ட போராட்டம் 174 நாட்கள் நடைபெற்று, தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

    இதற்கிடையே, நல்லாண்டார்கொல்லையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் சேகரிக்கும் தொட்டியில், சமீபத்தில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த தொட்டியை வருவாய்த்துறை அதிகாரிகள் மண்ணை கொட்டி மூடினர்.

    அதேபோல், வானக்கண்காட்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ராட்சத ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் போன்று திரவ வடிவில் வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள தொட்டியில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதோடு, கழிவில் தீப்பற்றி ஆபத்து நேரிடுமோ என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வந்தனர். இதையடுத்து, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது, மாவட்ட கலெக்டரிடம் கழிவு தொட்டியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இந்தநிலையில் நேற்று அங்கு சென்ற ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தொட்டியில் இருந்து கழிவுகளை எந்திரம் மூலம் உறிஞ்சி எடுத்தனர். பொக்லைன் எந்திரம் மூலமும் கழிவுகளை அகற்றினர். பின்னர் லாரிகள் மூலம் மணல் அள்ளி வந்து, தொட்டியில் கொட்டி மூடினர். இது குறித்து வானக்கண்காடு பகுதி மக்கள் கூறுகையில், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தொட்டியில் இருந்த கழிவுகளை பாதி மட்டுமே எந்திரம் மூலம் உறிஞ்சி எடுத்தனர். பின்னர், அப்படியே மண்ணை கொட்டி தொட்டியை மூடிவிட்டு சென்றுவிட்டனர், என்றனர்.

    முன்னதாக வடகாடு பகுதி இளைஞர்கள் கல்லிக்கொல்லையில் அமைக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறு அருகே திரண்டு ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வடகாடு போலீசார் வானக்கண்காடுக்கு அதிகாரிகளை அழைத்து சென்றனர்.
    Next Story
    ×