search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் ரூ.640 கோடியில் 32 நவோதயா பள்ளிகளை அமைக்க அரசு திட்டம்
    X

    தமிழ்நாட்டில் ரூ.640 கோடியில் 32 நவோதயா பள்ளிகளை அமைக்க அரசு திட்டம்

    தமிழகத்தில் ரூ.640 கோடி செலவில் 32 நவோதயா பள்ளிகளை அமைப்பது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்க விரைவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    1986-ம் ஆண்டு நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா என்ற மாதிரி பள்ளிகளை அமைக்க மத்திய அரசு முன்வந்தது. 6-ம் வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரை இந்த பள்ளியில் வகுப்புகள் இருக்கும்.

    மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படும். இங்கு படிக்கும் மாணவர்கள் அங்கேயே தங்கி இருந்து படிக்கும் வகையில் இந்த பள்ளி உருவாக்கப்பட்டது.

    நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளி வீதம் தொடங்க முடிவு செய்யப்பட்டு அதன்படி தொடங்கப்பட்டது. இந்த பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக இருந்தது. எனவே, நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் திறக்க எதிர்ப்பு கிளம்பியது.

    இதன் காரணமாக தமிழ்நாட்டில் அப்போது நவோதயா பள்ளி திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டை தவிர, அனைத்து மாநிலங்களிலும் இப்போது நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன்படி நாடு முழுவதும் 600 பள்ளிகள் இயங்குகின்றன.

    இந்த பள்ளிகளில் கல்வித்தரம் மிக சிறப்பாக உள்ளது. நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களே அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ நீட் நுழைவு தேர்வு நடந்த போது, மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் வெற்றி பெற முடியாமல் தவித்தனர்.

    எனவே, நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அங்கு படிக்கும் மாணவர்கள் நுழைவு தேர்வில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் நவோதயா பள்ளி அமைப்பதற்கு மத்திய அரசு முன்வந்தது. 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு தகவல் அனுப்பியது. ஆனால், இதை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது.

    தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கடந்த மாதம் இதன் மீது தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், தமிழக அரசு நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைக்க தமிழக அரசு தற்போது ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    நவோதயா பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுவதால் தான் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், தற்போது நவோதயா பள்ளிகளில் இந்தி கட்டாயம் அல்ல. அதே நேரத்தில் முதல் மொழி பாடமாக தமிழை வைத்து கொள்ளலாம். 2-வது மொழி பாடமாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    தமிழை தாய் மொழியாக கொண்டிருக்காதவர்கள் விருப்பப்படும் வேறு மொழிகளை எடுத்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதை ஏற்று தமிழக அரசு நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கு முன் வந்துள்ளது. இதன்படி 32 மாவட்டங்களிலும் தலா ஒரு பள்ளி தொடங்கப்பட உள்ளது. இதற்கு 15 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஒவ்வொரு பள்ளியும் ரூ.20 கோடி செலவில் கட்டப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் சேர்ந்து ரூ.640 கோடி செலவிடப்படும்.

    நவோதயா பள்ளிகளை அமைப்பது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்க விரைவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதில் முடிவு எடுத்ததும் பள்ளிகளை தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

    தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த பள்ளிகள் தற்போது இல்லை. பக்கத்து மாநிலமான புதுவையில் 2 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ் மொழியும் பாட மொழியாக கற்பிக்கப்படுகிறது.

    நவோதயா பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரை வகுப்புகள் இருக்கும். 6-ம் வகுப்புக்கும், 11-ம் வகுப்புக்கும் நுழைவு தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் விடுதியிலேயே தங்கி இருந்து படிக்க வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.200 மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்கப்படும்.
    Next Story
    ×