search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீது சரமாரி தாக்குதல்
    X

    சாத்தான்குளம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீது சரமாரி தாக்குதல்

    சாத்தான்குளம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது49). இவர் தாமரைமொழி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர். தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய செயலாளராக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சாத்தான்குளத்தில் இருந்து தாமரைமொழி கிராமத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது தாமரைமொழி சுடுகாடு அருகே உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான தகர போர்டு மற்றும் இரும்பு கம்பிகளை 4 பேர் உடைத்து எடுத்து சென்றனர். அதை பார்த்த ஜெயராமன் பஞ்சாயத்துக்கு சொந்தமான போர்டை எப்படி எடுத்து செல்லலாம் என்று சத்தம் போட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர்களும், ஜெயராமனை சரமாரியாக அடித்து உதைத்து தலையில் கல்லால் தாக்கி விட்டு ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த ஜெயராமன் சாத்தான்குளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த சுப்பையா, அவரது மகன்கள் சீனிவாசன், கருப்பசாமி, மற்றொரு உறவினர் என்று 4 பேர் ஜெயராமனை தாக்கிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×