search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசேரி பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
    X
    வடசேரி பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

    விமான கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலித்த ஆம்னி பஸ்கள்

    நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல விமான கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலித்த ஆம்னி பஸ்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    நாகர்கோவில்:

    ஆயுத பூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்தனர். 4 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று அவர்கள் மீண்டும் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பினர்.

    குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசிக்கிறார்கள். மேலும் கல்லூரி மாணவ-மாணவிகள் அங்கு தங்கி படிக்கிறார்கள். அவர்கள் விடுமுறை முடிந்து நேற்று மாலை ஊர் திரும்பினர். ரெயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிந்ததால் அவர்கள் ஊருக்கு செல்ல வடசேரி பஸ் நிலையத்துக்கு படையெடுத்தனர்.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அந்த சிறப்பு பஸ்களும் போதவில்லை. பயணிகள் கூட்டம் பஸ்நிலையத்தில் தொடர்ந்து அலைமோதியபடி இருந்தது. பஸ் கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர் பரிதவித்தனர்.

    கூட்ட நெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பஸ்கள், கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வசூலித்தன. வழக்கமாக நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் ரூ.650 முதல் ரூ.1200 வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் நேற்று பயணிகளிடம் 3 மடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பலர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளையும், விஜயகுமார் எம்.பி.யையும் தொடர்பு கொண்டு புகார் செய்தனர்.

    இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரி ரஜினிகாந்த் உத்தரவின்பேரில் ஆய்வாளர்கள் பிரபாகரன், பெலிக்சன் மாசிலாமணி ஆகியோர் வடசேரியில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்துக்கு வந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் இணைந்து விஜயகுமார் எம்.பி.யும் ஆய்வில் ஈடுபட்டார்.

    வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், விஜயகுமார் எம்.பி. ஆகியோர் சோதனையில் ஈடுபட்ட காட்சி

    அப்போது நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்வதற்கு பல பஸ்களில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 350 வரை வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 4 பஸ்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 18 ஆம்னி பஸ்களுக்கு அதிகாரிகள் நோட்டீசு வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு 11.30 மணி வரை நீடித்தது.

    சோதனை குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ரஜினிகாந்த் கூறியதாவது:-

    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நேற்று எங்களுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தினோம். அப்போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல பஸ்களில் அதிக பணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டது.

    பயணிகள் நலன் கருதி முதற்கட்டமாக நோட்டீசு கொடுத்து அந்த பஸ்களை சென்னைக்கு அனுப்பி வைத்தோம். சென்னை சென்றதும் அந்த பஸ்களை பறிமுதல் செய்ய அங்குள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அங்கு பறிமுதல் செய்யப்படாவிட்டால் மீண்டும் அந்த பஸ்கள் நாகர்கோவில் வரும்போது நாங்கள் பறிமுதல் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்பட்ட கட்டணம், விமான கட்டணத்தை விட கூடுதலாக இருந்ததாக பயணிகள் குற்றம் சாட்டினர். சாதாரண நேரங்களில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்ல ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2700 வரை வசூலிக்கப்படுவதாகவும், அதை விட தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர். இதுபோல் வசூலிக்கும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே இன்று மாலையும் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×