search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்: தேர்தல் கமி‌ஷனிடம் கே.சி.பழனிச்சாமி மனு
    X

    அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்: தேர்தல் கமி‌ஷனிடம் கே.சி.பழனிச்சாமி மனு

    கட்சி சட்ட விதிகளில் உள்ளபடி அ.தி.மு.க. பொதுச்செயலாளரை கடந்த காலங்களை போல கட்சி உறுப்பினர்களை கொண்டு ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனிடம் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி மனு அளித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    அப்போது அதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் எம்.பி.யும் ஆன கே.சி. பழனிச்சாமி மத்திய தேர்தல் கமி‌ஷனிடம் மனு அளித்து இருந்தார். அந்த மனு விசாரணையின் கீழ் உள்ளது.

    இந்த நிலையில் கே.சி. பழனிச்சாமி இப்போது மீண்டும் தேர்தல் கமி‌ஷனுக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர். கட்சிக்கென்று பல்வேறு சட்ட திட்ட விதிமுறைகளை உருவாக்கினார். அதை தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்து அதன் அடிப்படையில் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கட்சியின் சட்டதிட்டங்களின்படி கட்சியின் உறுப்பினர்கள், பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் ஏற்கனவே முறைப்படி தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அந்த பதவி காலியானது. அதை தொடர்ந்து கட்சி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

    அப்போது கட்சி விதிமுறைகள்படி உறுப்பினர்களை கொண்டு பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என அப்போது பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    ஆனால், 2017 பிப்ரவரி 14-ந்தேதி சசிகலா குற்றவாளி என சுப்ரீம் கோர்ட்டால் தீர்ப்பு கூறப்பட்டது. இதனால் அவர் வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டப்படி நீக்கப்படுகிறார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு இருந்த தினகரனை சசிகலா கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்தார்.

    சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது என மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த மனு தேர்தல் கமி‌ஷன் முன்னிலையில் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி ஓ.பன்னீர் செல்வம் அணியினரும், எடப்பாடி அணியினரும் இணைந்து பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார்கள்.

    அதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி பொதுச் செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரங்கள் அந்த பதவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    அதாவது பொதுச் செயலாளர் பதவி இல்லாமலேயே கட்சியை நடத்தும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆனால், கட்சியின் சட்ட விதிகள்படி பொதுச் செயலாளர் பதவி இருக்க வேண்டும். பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்தால் ஏற்கனவே இருந்த பொதுச்செயலாளர் காலத்தில் மற்ற எந்தெந்த பதவிகள் இருந்தனவோ அவைகள் நீடிக்க வேண்டும் என்பது சட்ட விதியாகும்.

    அ.தி.மு.க. சட்ட விதிகளில் உள்ளபடி அ.தி.மு.க. பொதுச்செயலாளரை கடந்த காலங்களை போல கட்சி உறுப்பினர்களை கொண்டு ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும்.

    இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்ய வேண்டும். இதற்காக தேர்தல் கமி‌ஷன் உரிய அதிகாரி ஒருவரை நியமித்து அவரது கண்காணிப்பின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும்.

    விரைவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், எல்லாம் வேட்பாளருக்கு பொதுச் செயலாளர் கையெழுத்திட வேண்டும்.

    எனவே, விரைவில் இந்த தேர்தலை நடத்த வேண்டும். கட்சி விதிகளின்படி 6 மாதத்துக்கு மேல் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருக்க கூடாது.

    இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.
    Next Story
    ×