search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2½ வயது குழந்தை உயிருடன் மீட்பு
    X

    திருத்தணி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2½ வயது குழந்தை உயிருடன் மீட்பு

    திருத்தணி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2½ வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதால் அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    பள்ளிப்பட்டு:

    திருத்தணியை அடுத்த முருகம்பட்டு காலனியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது 2½ வயது மகள் விஜயா. நேற்று காலை வீட்டின் அருகே குழந்தை விஜயஸ்ரீ விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது அங்கு இருந்த சுமார் 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டு துளையில் தவறி விழுந்தாள். சுமார் 6 அடி ஆழத்தில் குழந்தை விஜயஸ்ரீ சிக்கி அலறினாள்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தை விழுந்த துழையின் அருகே சிறிது ஆழத்துக்கு அகலமாக தோண்டினர். பின்னர் துளைக்குள் கையை விட்டு விஜயஸ்ரீயை வெளியே தூக்கினர்.

    குழந்தை விஜயஸ்ரீ நலமாக இருந்தார். இதனால் பெற்றோரும், கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடந்த ஓராண்டுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பக்கவாட்டில் உள்ள துளையை மூடாமல் விட்டு இருந்தனர். குழந்தை அதிக ஆழத்துக்கு செல்லாமல் சிக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதையடுத்து ஆழ்துளை கிணற்றை பொதுமக்கள் மண்கொட்டி மூடினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    திருத்தணியை அடுத்த கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜுலு (வயது 73). கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பவில்லை. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை திருத்தணியை அடுத்த முருகூர் கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்து கிடப்பது தெரிந்தது.

    தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் உயிருக்கு போராடிய ரங்கராஜுலுவை கயிற்றில் கட்டி ஏணி முலம் தீயணைப்பு வீரர்கள் மேலே கொண்டு வந்தனர்.

    கடந்த 3 நாட்களாக அவர் கிணற்றில் இருந்ததால் உடல் சோர்ந்து காணப்பட்டார். அவரை உடனடியாக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் தற்போது நலமாக உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ரங்கராஜுலு கிணற்றின் அருகே நடந்து சென்ற போது அதில் தவறி விழுந்து உள்ளார். கிணற்றில் மழைநீரால் சேர்ந்த தண்ணீர் மட்டும் சுமார் 2½ அடி இருந்தது. இதனால் அவர் குறைந்த தண்ணீரில் நின்றபடி உயிர் தப்பினார்.

    3 நாட்களாக கிணற்றில் தத்தளித்த முதியவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×