search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா பகுதிகளில் சம்பா தொகுப்பு திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
    X

    டெல்டா பகுதிகளில் சம்பா தொகுப்பு திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

    டெல்டா பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    டெல்டா பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்ற ஆண்டு, வரலாறு காணாத கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு விவசாயிகளுக்கு, குறுவை மற்றும் சம்பா சாகுடி செய்வதற்கென தொகுப்பு திட்டங்களை அம்மா அவர்கள் வழங்கினார்கள். அது மட்டுமல்லாமல், சம்பா சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகளை, புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைத்தது. இதன் மூலம், சம்பா நெற்பயிருக்காக மட்டும் ரூ.2,262.52 கோடி இழப்பீட்டுத் தொகை, பயிர் காப்பீட்டு நிறுவனங்களால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு, 5,63,456 விவசாயிகளின் வங்கி கணக்கில் இன்று வரை (28.9.2017) ரூ.1,762.45 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட வேளாண் பெருமக்களின் நலனில் அக்கறை கொண்டு, இடுபொருள் மானியமாக, ரூ.2,247 கோடி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

    கடந்த ஓராண்டாக காவிரி நதியில் விவசாயம் செய்ய போதுமான நீர் இல்லாத காரணத்தினாலும், நிலத்தடி நீர் குறைந்த காரணத்தினாலும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் சம்பா நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒரு தொகுப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தும். சம்பா பருவ சாகுபடிக்காக, மேட்டூர் அணையை, 2017, அக்டோபர் 2ம் தேதி திறக்க உள்ள நிலையிலும், பரவலாகப் பெய்து வரும் மழையினை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ரூ.41.15 கோடி மதிப்பீட்டில் சம்பா தொகுப்பு திட்டம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஆகியவற்றிலும் கடலுhர், புதுக்கோட்டை, அரியலுhர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களின் டெல்டா பகுதிகளில் மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தும்.

    இதன்படி,
    1) விவசாயிகள் நேரடி நெல் விதைப்புக்கான தரிசு உழவுப் பணியினை மேற்கொள்வதற்கு மானியமாக ஏக்கருக்கு ரூ. 500 /- வீதம் 5 லட்சம் ஏக்கருக்கும்,
    2) விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகள் பெற ஏதுவாக மானியமாக கிலோ ஒன்றிற்கு ரூ. 10 /- வீதம் 4500 மெ.டன் விதைகளும்,
    3) நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் இடங்களில், களை பாதிப்பு அதிகளவு இருக்கும் என்பதால், களைக்கொல்லி மருந்து தெளிக்க, ஏக்கருக்கு ரூ. 280 /- மானியமாக 2.50 இலட்சம் ஏக்கர் பரப்பிற்கும்,
    4) நெல் சாகுபடி ஆயத்த பணிகளான உழவு மற்றும் நடவு மேற்கொள்ளும் வகையில், நிலத்தினை தயார்படுத்த, 620 இயந்திர உழுவைகள் (பவர் டில்லர்ஸ்) இயந்திரம் ஒன்றுக்கு ரூ.75,000/- வீதம் மானியமாக வழங்கப்படும்.

    சம்பா நெல் சாகுபடிக்குத் தேவையான தரமான விதைகள், இரசாயன உரங்கள், உயிர் உரங்கள், பயிர்ப்பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களை இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்டா மாவட்ட வேளாண் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நடப்பு சம்பா பருவத்தில் நீண்ட கால நெல் ரகங்களை தவிர்த்து, மத்திய மற்றும் குறுகிய கால நெல் ரகங்களை நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்து பயனடைய டெல்டா மற்றும் இதர மாவட்ட விவசாயிகளை கேட்டுக்
    கொள்கிறேன்.

    மேலும், விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் போதிய அளவு பயிர்க்கடன் வழங்க அறிவுரை வழங்கியுள்ளேன். சம்பா
    சாகுபடி பணிகளை துவக்கும் போதே, புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டு, பயன் பெறுமாறு வேளாண் பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதற்கென,அரசு 2017-18ம் ஆண்டிற்கு காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.522 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    தமிழ்நாடு அரசு அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தினை பயன்படுத்தி, வெற்றிகரமாக குறுவை நெல் மற்றும் பயறுவகைகள் சாகுபடி மேற்கொண்டதை போன்று, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சம்பா
    தொகுப்பு திட்டத்தினை பயன்படுத்திக் கொண்டு, சம்பா பருவத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நெல் சாகுபடி மேற்கொண்டு, உயர் மகசூல் பெறவேண்டுமாய் வேளாண் பெருமக்களை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×