search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கலெக்டர் பேச்சு
    X

    ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கலெக்டர் பேச்சு

    விவசாயம் செழிக்க ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
    வேலூர்:

    அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பிர்காவிற்கு உட்பட்ட நேமந்தபுரம், அத்திகுப்பம் மடையப்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம் நேமந்தபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆவின் தலைவர் வேலழகன் கலந்து கொண்டனர். முகாமில் 116 பயனாளிகளுக்கு ரூ.41¾ லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.

    ‘‘ஓய்வூதியம் பெற்ற முதியோர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒடுகத்தூரில் உத்திரகாவேரி ஆறுசெல்கிறது. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அந்த சமயத்தில் ஆற்றைகடக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். ஆகவே தரைபாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக கட்டித்தர வேண்டும்’’என்றார்.

    அதனை தொடர்ந்து கலெக்டர் ராமன் பேசுகையில், ‘‘இப்பகுதிக்கு உயர்மட்ட மேம்பாலம் வேண்டும் என எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கண்டிப்பாக உயர்மட்ட மேம்பாலம் கட்டி தரப்படும். அணைக்கட்டு தொகுதி பின்தங்கிய தொகுதியாக உள்ளது. விவசாயம் செழிக்க ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் உறை கிணறுகள் அமைத்து விவசாயத்திற்கு தேவையான நீரை சேமித்து வைக்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வரப்படும்.

    மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி வரை நடைபெற உள்ள ‘தூய்மையே சேவை’ இயக்கத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து அதன்முலம் சுத்தமான சுகாதாரமான புதிய பாரதத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்போம்’’ என்றார். அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
    Next Story
    ×