search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உரம்: கலெக்டர் தகவல்
    X

    சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உரம்: கலெக்டர் தகவல்

    சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உரம் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட வேலூர், நெடும்பலம், பாண்டி ஆகிய கிராமங்களில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள பகுதிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா மற்றும் தாளடி பருவங்களில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 200 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு இதுவரை நேரடி விதைப்பு மூலம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 605 ஏக்கரிலும், நடவு மூலம் 15 ஆயிரத்து 895 ஏக்கரிலும் ஆக மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் உழவுப் பணி மேற்கொள்ளப்பட்டு, 1 லட்சத்து 28 ஆயிரத்து 605 ஏக்கரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. நேரடி விதைப்பு பகுதிகளான திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் கோட்டூர் வட்டாரங்களில் நேரடி விதைப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சம்பா சாகுபடிக்கு 1066 மெட்ரிக் விதை நெல், அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு இதுவரை 700 மெட்ரிக் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் - நெல் திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றிற்கு ரூ.10 மானியத்தில் விதை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் நெல் நுண்ணூட்டம், திரவ உயிர் உரங்கள், களைக்கொல்லி ஆகியன 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகணன், வேளாண்மை (தரக்கட்டுப்பாடு) உதவி இயக்குநர் கணேசன், திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×