search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: பள்ளி குழந்தைகளை அழைத்து செல்ல தடை - ஐகோர்ட்டு உத்தரவு
    X

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: பள்ளி குழந்தைகளை அழைத்து செல்ல தடை - ஐகோர்ட்டு உத்தரவு

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்ல தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, கடந்த ஜூன் துவங்கி வரும் டிசம்பர் வரை மாநிலம் முழுவதும் 60 கோடி ரூபாய் செலவில் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

    இதன் துவக்க விழா மதுரையில் நடந்தது. தொடர்ந்து, பல்லடம், காஞ்சீபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இதுவரை இந்த விழா நடத்தப்பட்டுள்ளது.

    இந்த அரசு விழாக்களில், காலை முதல் மாலை வரை அரசு பள்ளி மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்துள்ளதாகக் கூறி, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    இதுபோன்ற அரசு விழாக்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கும்படி கட்டாயப்படுத்த கூடாது என, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக டி.ஜி.பி.க்கும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார் அளித்தும், பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் விழாக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

    பள்ளி வளாகத்திற்கு வெளியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பிரச்சாரங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்யும் போது, பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும், பள்ளி நிர் வாகங்களும் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை வகுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலர், டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன், சுப்பிரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பள்ளிக் குழந்தைகளை கால்நடைகளை நடத்துவது போன்று நடத்தாதீர்கள் என தெரிவித்தனர்.

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் பள்ளி குழந்தைகளை பங்கேற்க செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    மேலும் பள்ளி குழந்தைகளை பள்ளி வளாகத்துக்கு வெளியே நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கூட்டி செல்ல விதிமுறை வகுப்பது தொடர்பாகவும் பதிலளிக்க தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×