search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண்பேடி அழைப்பு
    X

    புதுவை அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண்பேடி அழைப்பு

    தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரச்சினைகள் தொடர்பாக சந்தித்து விவாதிக்கலாம் என கவர்னர் கிரண்பேடி புதுவை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    புதுச்சேரி: 

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சர்களுக்கும்  இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. 

    புதுவை அரசு மற்றும் அமைச்சர்கள் குறித்து அவ்வப்போது கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் விமர்சன  கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    மாநில வளர்ச்சிக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார் என்று புதுவை அமைச்சர்கள் தொடர்ந்து கவர்னர் மீது புகார்  செய்து வருகின்றனர். இதனால் மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கவர்னர் கிரண்பேடி தனியார் மருத்துவ கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில்  முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ.க்கு புகார் அனுப்பினார். இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி 2 ஐ.ஏ.எஸ்.  அதிகாரிகள் உள்பட 6 அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. 

    கவர்னர் வேண்டுமென்று திட்டமிட்டே புதுவை அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார் என்றும் கவர்னர் மீது அவதூறு  வழக்கு தொடரப் போவதாகவும், முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இதனால் கவர்னர், முதல்-அமைச்சர்  இடையேயான மோதல் மீண்டும் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. 

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரச்சினைகள் தொடர்பாக சந்தித்து  விவாதிக்கலாம் என புதுவை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

    கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: 

    புதுவை மாநில வளர்ச்சிக்கு ஏற்படும் தடையை போக்குவதில் எனக்கு மகிழ்ச்சி. புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாக  உள்ளவை குறித்து பட்டியலிட்டு எனக்கு சொல்லப்பட்டால் சந்தோஷமடைவேன். இது சம்பந்தமாக எந்த தினத்திலும்  என்னை சந்தித்து பேசலாம். ஆனால் முறைகேடு, லஞ்சம் விசாரிக்கப்படுவது ஒரு தடையென்றால் அது சரியாக  இருக்காது. நிர்வாகி என்ற முறையில் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுகிறேன். அதனை நான் செய்யவில்லையெனில்  எந்த நோக்கத்திற்காக நான் இங்கு பணி அமர்த்தப்பட்டேனோ அது தோல்வியில் முடிந்து விடும். 

    எனது அலுவலகத்திற்கு வரும் கோப்புகளை துல்லியமாக ஆராய்ந்து உடனடியாக அனுப்பி விடுகிறேன். ராஜ் நிவாஸ்  என்பது மக்களுக்கான நிவாஸ். இது மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்வதற்கு திறக்கப்பட்டுள்ளது. இங்கு பல  குறைகளை தீர்வு காணப்பட்டு வருகிறது. 

    பல பிரச்சினைகள் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டவை. நான் களத்திற்கு சென்று, பிரச்சினைகளை களைய  முயல்கிறேன். அதிகாரிகளும் அப்படியே கள பணிக்கு செல்லுகின்றனர். 

    பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க அமைச்சர்கள் எப்போது வேண்டுமென்றாலும் என்னை சந்தித்து  விவாதிக்கலாம். நான் நல்லதே நினைக்கிறேன். லஞ்சம், அநீதி, காலதாமதத்திற்கு தான் எதிரி. 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×