search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் கண்டனம்
    X

    மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் கண்டனம்

    ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்ற சம்பவத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு ஈழத் தமிழர்கள் குறித்து பேசினார்.

    இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களிடமும், உலகம் முழுமையும் வாழ்கின்ற புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வைகோ சுட்டிக்காட்டினார். மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் ‘தமிழ் ஈழ தேசத்தை’ அமைக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து அவரை திட்டியுள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று வைகோ வாதாடினார். பிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர்.

    இதுபற்றி வைகோ கூறும்போது, “இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள், காணாமல் போன கணவன், தந்தையை தேடி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள். 210 நாட்களாக பெண்கள் கிளிநொச்சியல் உண்ணாவிரதம்இருக்கிறார்கள். எங்கள் மக்கள் அழிக்கப்பட்டு எங்கள் இனமே அழிக்கப்படும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. 2015 தீர்மானத்தை ஏற்கவேண்டியதில்லை என்று ரணில் விக்ரமசிங்கேயும் மைத்ரிபாலா சிறிசேனாவும் சொல்கிறார்கள்.

    எனவே, மனித உரிமை ஆணையம் இதனை ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அனுப்பி அவர் நேரடியாக இலங்கை வந்து பார்வையிட்டு  நீதி வழங்க வேண்டும் என்று பேசினேன்.

    வெளியே வந்தபோது ஒரு பெண் என்னைப் பார்த்து நீ தமிழ்நாட்டில் இருந்து வந்து இலங்கையைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்று கேட்டார். நீங்கள் யார்? நீங்கள் சிங்களப் பெண்ணா? என்று அவரிடம் கேட்டேன். அவர் ஆமாம் என்றார். அவரிடம், உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்திருக்கிறார்கள், கொலை செய்திருக்கிறார்கள், எங்கள் மக்களின் குழந்தைகளைக் கொன்றிருக்கிறார்கள். எங்களுக்கும் அவகளுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொப்புள் கொடி உறவுகள் உள்ளன. எனக்கு பேச உரிமை உள்ளது, என்று சொன்னேன்.

    அதற்குள் இரண்டு முன்று நபர்கள் வந்தனர். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட சிங்கள கமாண்டர்கள் அவர்கள். என்னிடம், நீங்கள் தற்கொலை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நானும் பதில் பேசினேன். ஆனால், அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளனர்” என்றார்.

    வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மனித உரிமை கவுன்சிலுக்கு உள்ளேயே ஒரு தமிழரை சிங்களர்கள் தாக்க முயன்றது கவலை அளிப்பதாக கூறிய ஸ்டாலின், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
    Next Story
    ×