search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரிமுனை ரிசர்வ் வங்கி அருகே சாலை தடுப்பில் மோதி சுரங்க பாதையில் சிக்கிய பஸ் - 60 பயணிகள் உயிர் தப்பினர்
    X

    பாரிமுனை ரிசர்வ் வங்கி அருகே சாலை தடுப்பில் மோதி சுரங்க பாதையில் சிக்கிய பஸ் - 60 பயணிகள் உயிர் தப்பினர்

    பாரிமுனை ரிசர்வ் வங்கி அருகே சுரங்க பாதையில் உள்ள சாலை தடுப்பில் மாநகர அரசு பஸ் மோதிய விபத்தில் 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    சென்னை:

    சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள கண்ணகி நகரில் இருந்து 102 கே. மாநகர அரசு பஸ் இன்று காலை பாரிமுனை நோக்கி புறப்பட்டது.

    மெரினா காமராஜர் சாலை வழியாக வந்த பஸ் தலைமை செயலகத்தை தாண்டி ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் டிரைவர் சீனிவாசனால் பஸ்சை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லை.

    சாலை தடுப்பில் மோதிய பஸ் சுரங்கப்பாதைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நின்றது. பஸ் திடீரென விபத்துக்குள்ளானதால் பயணிகள் அலறியடித்தபடி கூச்சல் போட்டனர். விபத்தில் ஒரு சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொத்தவால்சாவடி போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சுரங்கப்பாதையின் நடுவில் பஸ் சிக்கி இருந்ததால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.

    இதனால் பாரிமுனை வழியாக கடற்கரையில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. பின்னர் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு பஸ்சை மீட்கும் பணி நடந்தது. இதனால் இன்று காலையில் பல மணி நேரமாக அந்த வழியில் போக்குவரத்து தடை பட்டிருந்தது.
    Next Story
    ×