search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதந்தோறும் 1200 ரூபாய் வழங்க ஒப்புதல்: போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் ஒத்திவைப்பு
    X

    மாதந்தோறும் 1200 ரூபாய் வழங்க ஒப்புதல்: போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் தலா 1200 ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்ததையடுத்து, தொழிற்சங்கங்கள் நடத்தவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள், போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை சுமூகமாக பேசி தீர்க்கவும் சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த 19-ந் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் போக்குவரத்து துறை அமைச்சருடன் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

    இதில் போக்குவரத்து துறை செயலாளர், 8 போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 47 சங்கங்கள் பங்கேற்றன.

    இந்த பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்க பிரதிநிதிகள், வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாச தொகையை வழங்கவேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திருப்பி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.7000 கோடி எப்போது தரப்படும் என்பது குறித்து தெளிவாக தீர்மானம் செய்யப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

    பண்டிகை காலம் நெருங்குவதால் வேலை நிறுத்தம் செய்தால் பொது மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, இறுதி முடிவு எட்டப்படும் வரை, ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் தலா ரூ.1200 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்த இடைக்கால நிவாரணம் குறித்த தகவலை தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அடுத்து டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறினார்.

    மேலும், நிலுவைத் தொகை வழங்குவது குறித்து டிசம்பர் 9-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பண்டிகை காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×