search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடி அகழாய்வு பணிகளை மத்திய அரசு சீர்குலைக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு
    X

    கீழடி அகழாய்வு பணிகளை மத்திய அரசு சீர்குலைக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

    பாரதிய ஜனதாவுக்கு எதிராக இருப்பதால் கீழடி அகழாய்வுப் பணிகளைச் சீர்குலைக்கும் செயலில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட அகழாய்வுப் பணிகள் நிறுத்தத்திற்கு, அதிகாரி மாற்றம்தான் காரணம் என்பதை நான் நம்பவில்லை”, என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்த கீழடி ஆராய்ச்சியில் தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம் தொடர்புடைய ஆதார பூர்வமான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. அந்த ஆய்வு முடிவுகள், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு புகுத்த நினைக்கும் காவிக் கொள்கைகளுக்கு ஏற்றதாக இல்லை என்பதால், அந்த அகழாய்வுப் பணிகளைச் சீர்குலைக்கும் செயலில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    மிகச்சிறந்த முறையில் அகழாய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். கீழடியில் தோண்டி எடுக்கப்பட்ட பொக்கி‌ஷங்களை வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தார்கள்.



    அப்போதே தி.மு.க.வின் சார்பில் 6.1.2017 அன்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மங்கேஷ் சர்மாவுக்குக் கடிதம் எழுதி, “அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது”, என்று வேண்டுகோள் விடுத்தேன். இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர், “அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தப்படாது”, என்று உறுதியளித்தார்.

    ஆனால் மத்திய அமைச்சரின் உறுதி மொழியை மீறி, இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீராமன், “மூன்றாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் வேறு எந்தப் பொருட்களும் கிடைக்க வாய்ப்பில்லை.

    ஆகவே அகழாய்வுப் பணி நிறுத்தப்படும்”, என்று கூறியிருப்பதும், “அப்படி நிறுத்தப்படுவதற்கு அதிகாரி மாற்றம்தான் காரணம் என்பதை நான் நம்பவில்லை”, என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் பேட்டியளித்திருப்பதும் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

    தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் தொடர்பான மிக முக்கியமான அகழ்வாராய்ச்சியில் மத்திய மாநில அரசுகள் கைகோர்த்து அந்தப் பணிகளுக்குத் தடை ஏற்படுத்த எப்படியெல்லாம் முற்படுகின்றன என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது.

    அகழாய்வுப் பணிக்குப் போதிய நிதி ஒதுக்காமல், தொல்லியல் துறை அதிகாரியை திடீரென இடமாற்றம் செய்து, புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி மூலம், “முந்தைய அகழாய்வில் கிடைத்தப் பொருட்களின் தொடர்ச்சிக் கிடைக்கவில்லை”, என்று ஒரு பேட்டியை கொடுக்க வைத்து, அகழாய்வுப் பணிகளை முற்றிலும் சீர்குலைக்கவே மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு விரும்புகிறது. அதற்கு இங்குள்ள ‘குதிரை பேர’ அரசும் துணை போகிறது.

    குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையே, “தமிழக அரசையும் சேர்த்து இந்த அகழ்வாராய்ச்சியை நடத்த வேண்டும்”, என்று தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டும், மத்திய அரசின் அதிகாரி ஒருவர், “மூன்றாவது கட்டப் பணிகளை நிறுத்தப் போகிறோம்”, என்று தன்னிச்சையாகக் கூறுவது ஆணவப் போக்காக அமைந்துள்ளது.

    2200 ஆண்டுகளுக்கும் முன்பான தமிழர்களின் பண்டைய நாகரிகம், கட்டிடக் கலைகள் போன்ற அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்ட ஒரு அகழாய்வு பணியில், இவ்வளவு குழப்பங்களை மத்திய தொல்லியல் துறை ஏதோ தன்னிச்சையாக செய்கிறது என்பதை நம்ப நான் தயாராக இல்லை.

    இந்நிலையில், தமிழ் செம்மொழி மத்திய நிறுவனத்திற்கு, தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு நிதி, ஒரே வருடத்தில் 50 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பது மேலும் வேதனையளிக்கிறது.

    எப்படியாவது பதவியில் நீடித்தால் போதும் என்று இருக்கும் ‘குதிரை பேர’ அரசு இதுபற்றி தட்டிக்கேட்க மறுத்து வருகிறது. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், பண்டைய நாகரிகம் போன்றவற்றின் மீது ‘குதிரை பேர’ அரசு காட்டும் அலட்சியத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்க அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆகவே, ஏற்கனவே மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் அளித்த உறுதி மொழியின்படி, கீழடி அகழாய்வின் மூன்றாவது கட்டப் பணிகளை எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல், தொடர்ந்து நடத்திட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
    Next Story
    ×