search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

    தெலுங்கானா முதல் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மேலும் கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா முதல் தமிழகம் வரை வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தெலுங்கானா முதல் தமிழகம் வரை வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது இன்று) தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது கனமழையோ பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேர கணக்கீட்டின்படி தமிழகத்தில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. சேலம் மாவட்டம் சங்கரிதுர்க், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்து உள்ளது.

    வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டபடி சென்னையில் அனேக இடங்களில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக சென்னை எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, அமைந்தகரை, பெரியமேடு, சென்டிரல் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. வட சென்னையின் பல பகுதிகளிலும் நேற்று மாலை நல்ல மழை பெய்தது.

    நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்தது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. எதிர்பாராத மழை காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கொட்டும் மழையில் நனைந்தபடியே சென்றனர். அதேபோல விடுமுறை தினமான நேற்று மெரினாவில் குவிந்த மக்கள் மழையால் சிரமம் அடைந்தனர். மழையில் நனைந்தபடியே ஓட்டமும், நடையுமாய் கடற்கரையில் இருந்து வீடுகளுக்கு சென்றனர்.
    Next Story
    ×