search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்தில்பாலாஜி நண்பர்கள் நிறுவனங்களில் 4 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு
    X

    செந்தில்பாலாஜி நண்பர்கள் நிறுவனங்களில் 4 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்களது நிறுவனங்களில், 4 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை முடிவடைந்தது. இதில் கணக்கில் வராத ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க. (அம்மா) அணியில் டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்ததில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில்பாலாஜியும் ஒருவர் ஆவார்.

    அவருடைய நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் பலர் கரூரில் நிதி நிறுவனம், ஜவுளி நிறுவனம், சாயப்பட்டறைகள் நடத்தி வருகின்றனர். பலர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்கள் மீது வரிஏய்ப்பு புகார் வந்ததன் அடிப்படையில் கடந்த 21-ந் தேதி கோவை வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை, கரூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த வருமானவரி அதிகாரிகள் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை இரவு, பகலாக தொடர்ந்து நடந்தது. ஒவ்வொரு நிறுவனத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு கணக்குகளை ஆராய்ந்தனர். இதில் பல நிறுவனங்களில் பலர் பங்குதாரர்களாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுடைய நிறுவனங்களிலும் சோதனை நடத்தினர். பிளைவுட்ஸ் கடை உரிமையாளர் ஒருவரது வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது. மேலும் பல இடங்களில் சோதனை நீடித்தது.

    இந்த சோதனையில் செந்தில்பாலாஜியின் நண்பர்களில் ஒருவரான தாரணி சரவணனின் நிதி நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார் காரணமாக, கரூர் லைட்ஹவுஸ் அருகே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் முதல் தளத்தில் இயங்கி வந்த அவரது நிதி நிறுவன அலுவலகத்திற்கு வருமான வரி அதிகாரிகள் கடந்த 22-ந் தேதி நள்ளிரவு ‘சீல்’ வைத்தனர்.

    இந்தநிலையில் நேற்று ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள சாமிநாதன் என்பவரது ஜவுளி நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் நேற்று 4-வது நாளாக சோதனை நடத்தினர். அப்போது அலுவலக கணக்குகளை தீவிரமாக ஆராய்ந்தனர். சாமிநாதனிடம் அதிகாரிகள் பல கேள்விகளை துருவி, துருவி கேட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.

    நேற்று மதியம் 1.45 மணி அளவில் சாமிநாதன் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர். அவரது நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை 10 அதிகாரிகள் 3 கார்களில் ஏற்றினர்.

    அப்போது வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சோதனை குறித்து கேட்டபோது எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பின்னர், அவர்கள் கார்களில் புறப்பட்டு கரூர் சின்னஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. சோதனை முடிவடைந்ததால் வருமானவரி அதிகாரிகள் அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    சோதனை குறித்து வருமானவரி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது சிலர் கூறுகையில், “கரூரில் கடந்த 4 நாட்களில் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.70 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும்” என்றனர்.

    இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

    வருமானவரி அதிகாரிகளின் சோதனையால் கரூரில் கடந்த 4 நாட்களாக பெரும் பரபரப்பு நிலவியது. சோதனை நடந்த நிறுவனங்களில் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. ஜவுளி நிறுவனங்களில் வார சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை இருந்தது.

    இந்தநிலையில் வருமான வரி அதிகாரிகளின் சோதனை நிறைவடைந்து இருப்பதால், அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சோதனை நிறைவுபெற்றதால் இனி நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும் எனத் தெரிகிறது. இந்த சோதனையை தொடர்ந்து, முக்கிய நபர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடருவார்கள் என தெரிகிறது.
    Next Story
    ×