search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் கிரிக்கெட் வெற்றி கோப்பை சமர்ப்பிப்பு
    X

    பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் கிரிக்கெட் வெற்றி கோப்பை சமர்ப்பிப்பு

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் 82-வது பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்ற சாம்பியன் கோப்பை சமர்ப்பிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழக இளைஞர்களிடையே கிரிக்கெட் ஆர்வத்தை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் “தமிழ்நாடு பிரிமீயர் லீக்” கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 8 அணிகள் கலந்து கொண்டு இந்த போட்டிகளில் விளையாடின.

    தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள இந்த போட்டியில் மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தனின் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (பட்டைய கிளப்பு) அணி சிறப்பாக செயல்பட்டது. கடந்த ஆண்டு நடந்த முதல் போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட சூப்பர் கில்லிஸ் இந்த ஆண்டு அதிரடியாக ஆடி பட்டையை கிளப்பியது.

    இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தூத்துக்குடி அணியை வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தனித்துவம் மிக்க அணி என்பதை நிரூபித்தது.

    மேலும் அந்த டி.என். பி.எல். சாம்பியன் கோப்பையை பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சமர்ப்பணம் செய்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் 82-வது பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்ற டி.என்.பி.எல். 2017 சாம்பியன் கோப்பை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படம் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அது உலக விளையாட்டு அரங்கில், இந்தியாவை தலைமை நிமிரச் செய்த தலைமகனின் பொற்பாதங்களில் சமர்ப்பணம் செய்ததாக அமைந்தது.

    விளையாட்டுத் துறையில் விண்ணை தொடும் அளவுக்கு சேவைகள், சாதனைகள் புரிந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு ஏராளமான விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    Next Story
    ×