search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதியை உடனடியாக நியமிக்க கோரி ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பிரமுகர் மனு
    X

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதியை உடனடியாக நியமிக்க கோரி ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பிரமுகர் மனு

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    சென்னை:

    திருவாரூர் மாவட்டம் கொடவாசலைச் சேர்ந்தவர் முருகானந்தம். அ.தி.மு.க. பிரமுகர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறந்து போனார். அவரது மரணத்தில் பல்வேறு விதமான கருத்துகள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை.

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர். ஜெயலலிதா மரணம் அடைந்ததும் இயற்கை மரணம் என்று மக்களை நம்ப வைத்தனர். இந்தநிலையில் முதல்-அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜெயலலிதாவின் சமாதியில் மவுனம் கடை பிடித்தார்.

    இதன்பின்பு அவர், ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல என்றும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்றும் கோரினார். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    இதன்பின்பு, பன்னீர்செல்வமும் எதிர் அணியினரும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17.8.2017 அன்று அறிவித்தார்.

    இந்த அறிவிப்புக்கு பின்பு நீதி விசாரணை தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன்பின்பும், அமைச்சர்களும், பிற அரசியல் கட்சியினரும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இதன்மூலம் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை, அவரது மரணத்துக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருந்துள்ளது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

    நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பேசி இருக்கக்கூடாது. இதுபோன்று பேசுவதால் நீதி விசாரணை நேரடியாகவோ, மறைமுகமாவோ பாதிக்கும். எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பொது மேடைகளில் பேசுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

    ஜெயலலிதா மரணத்தில் உண்மையை கண்டறிய ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டபடி ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை உடனடியாக நியமித்து நீதி விசாரணையை தொடங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    Next Story
    ×