search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தனூர் அணை நீர்மட்டம் 100 அடியை கடந்தது: 25-ந்தேதி தண்ணீர் திறப்பு
    X

    சாத்தனூர் அணை நீர்மட்டம் 100 அடியை கடந்தது: 25-ந்தேதி தண்ணீர் திறப்பு

    திருவண்ணாமலை சாத்தனூர் அணை நீர்மட்டம் 100 அடியை கடந்துள்ளது. வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் வினாடிக்கு 750 கன அடி வீதம் தொடர்ந்து 5 நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் கிராமம் வழியாக பாய்ந்து ஓடும் தென் பெண்ணையாற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது.

    இந்த அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    சாத்தனூர் அணையின் நீர்மட்ட உயரம் 119 அடி. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது.

    இதனால் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணை நிரம்பியது. எனவே, அந்த அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இந்த வெள்ள தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டம், நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணைக்கு ஆர்ப்பரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி, சாத்தனூர் அணை நீர்மட்டம் 100.05 அடியாக உயர்ந்துள்ளது.அணையில் 3,761 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கி இருக்கிறது. விநாடிக்கு 416 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், 2 மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாத்தனூர் அணையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணையாற்றில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்ட நீராதார கிணறுகளின் தேவைக்காக ஆற்றில் நீரோட்டம் ஏற்பட செய்து செரிவூட்டுதலுக்காக வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் வினாடிக்கு 750 கன அடி வீதம் தொடர்ந்து 5 நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இதன் மூலம் தென்பெண்ணையாற்றில் நாளொன்றுக்கு 64.80 மில்லியன் கன அடி வீதம் ஆக மொத்தம் 324 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×