search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளையில் பைக் மீது அரசு பஸ் மோதல்: வேன் டிரைவர் பலி
    X

    பாளையில் பைக் மீது அரசு பஸ் மோதல்: வேன் டிரைவர் பலி

    பாளையில் பைக் மீது அரசு பஸ் மோதியதில் வேன் டிரைவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள பக்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது27). இவர் பாளை ரஹ்மத்நகரில் உள்ள ‘டைல்ஸ்’ கடையில் வேன் டிரைவராகவேலை பார்த்து வந்தார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பாளை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேகர் (18) என்பவர் ‘லிப்ட்’ கேட்டு பாளை வரை வருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார்.

    பாளை கே.டி.சி.நகர் அருகே நான்கு வழிச் சாலையில் மோட்டார் சைக்கிள் வந்த போது, முன்னால் சென்ற டிப்பர் லாரி டிரைவர் திடீரென்று வேகத்தை குறைத்தார். இதனால் அதன் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த குமரேசன், நிலை தடுமாறி, டிப்பர் லாரியின் பின் பகுதியில் மோதி சாலையின் நடுவே மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் தூத்துக்குடியில் இருந்து நெல்லையை நோக்கி பாயிண்ட் டூ பாயிண்ட் அரசு பஸ் வேகமாக வந்தது. அந்த பஸ் சாலையில் விழுந்து கிடந்த குமரேசன் மீது ஏறி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குமரேசன் ரத்த வெள்ளத்தில் தலைநசுங்கி பலியானார். சேகர் அதிர்ஷ்டவசமாக சாலையோரம் விழுந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    உடனடியாக அந்த அரசு பஸ்சில் வந்தவர்களும், அந்த வழியாக வந்தவர்களும் சேகரை மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சம்பவ இடத்துக்கு பாளை தாலுகா போலீசாரும், நெல்லை மாநகர போலீசாரும் விரைந்து வந்து பலியான குமரேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை, சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×