search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி மீது கிரிமினல் வழக்கு: நாராயணசாமி பேட்டி
    X

    கவர்னர் கிரண்பேடி மீது கிரிமினல் வழக்கு: நாராயணசாமி பேட்டி

    முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர் மீது பழிபோட அதிகாரிகளை தூண்டி விடும் கவர்னர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்டாக் பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து சர்ச்சை நடந்து வருகிறது. சென்டாக் அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சி.பி.ஐ. தொடர்பான கருத்துக்களை நான் தெரிவிக்கமாட்டேன். ஆனால் கவுன்சிலிங் தொடர்பாக கவர்னர் கருத்து கூறும்போது புதுவை அதிகாரிகள், தலைமை செயலாளர், சென்டாக் அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்- அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.

    எங்கள் அரசு அனுப்பிய அனைத்து கோப்புகளிலும் கவர்னர் கையெழுத்திட்டுள்ளார். அப்படியென்றால் அவருக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லையா? ஏற்கனவே மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டமன்றத்தில் விவரமான அறிக்கை சமர்பித்துள்ளேன்.

    புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியில்தான் பட்ட மேற்படிப்பில் முதல் முறையாக 50 சதவீத இடங்கள் பெறப்பட்டது. கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஒரு இடம்கூட பெறவில்லை.

    இந்திய மருத்துவகவுன்சில், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை கடைபிடித்து மாணவர்களை தகுதி அடிப்படையில் தரவரிசை தயாரித்து கவுன்சிலிங் நடத்தினோம்.

    இதில் மாநில அரசுக்கு 122 இடங்களும், நிர்வாகத்திற்கு 158 இடங்களும் ஒதுக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஒரு இடம்கூட அரசுக்கு ஒதுக்கீடாக பெறப்படவில்லை. ஆனால் புதுவையில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இடங்களை பெற்றோம். இது எங்கள் அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

    3 கட்டமாக கவுன்சிலிங் நடத்தினோம். இதில் முதல் கட்டத்தில் 114 இடங்கள் நிரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து மாப்-ஆப் கவுன்சிலிங் வரை இந்திய மருத்துவ கவுன்சிலிங் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றியே மாணவர் சேர்க்கை நடந்தது.

    கடந்த ஏப்ரல் மாதமே கட்டணத்தை நிர்ணயிக்கும்படி கட்டணக்குழு தலைவருக்கு மாநில அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்ததால் கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. இருப்பினும் தமிழகத்தை போன்ற கட்டணத்தை நிர்ணயித்து பின்னர் அறிவித்தார்.

    மாணவர்கள் கட்டணம் செலுத்தவும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. சென்டாக்கை பொறுத்த வரை மாணவர்களை தேர்வு செய்து கடிதம் அனுப்புவதோடு அதன் பணிகள் முடிவடைந்து விடும். மாணவர் சேர்க்கையை கண்காணிக்கும் பொறுப்பு இந்திய மருத்துவ கவுன்சிலுக்குத்தான் உள்ளது.


    ஏனெனில் இந்திய மருத்துவ கவுன்சில்தான் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. அதோடு ஓய்வுபெற்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தலைமையிலான குழுவுக்கு மாணவர் சேர்க்கையை கண்காணிக்கும் பொறுப்பு உள்ளது. இதில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. கவுன்சிலிங் நடந்தபோது கவர்னர் நேரடியாக அந்த இடத்திற்கு சென்றார். அங்கு அதிகாரிகளை தனது உத்தரவுக்கு பணிய செய்து 26 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு கடிதம் அளிக்க வைத்தார்.

    இவை அனைத்தும் விதிமீறல்கள். கவுன்சிலிங் நடந்த இடத்திற்கு கவர்னர் சென்றது முதல் தவறு. அதிகாரிகளை உத்தரவிட்டு கவுன்சிலிங் நடத்த வைத்தது 2-ம் தவறு. 26 மாணவர்களை சேர்க்க கடிதம் அளித்தது 3-வது தவறு.

    இப்படி இந்திய மருத்துவ கவுன்சில், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை கவர்னர் மீறினார். அதுமட்டுமின்றி காலியிடங்களை ஒன்றுக்கு 10 என்ற விகிதத்தில் கல்லூரி நிர்வாகங்களுக்கு அறிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. சுப்ரீம்கோர்ட்டும் இதை அறிவுறுத்தியுள்ளது.

    இந்த தீர்ப்பை கவர்னர் மீறியுள்ளார். புதுவை அதிகாரிகளை பொறுத்தவரை ஐ.ஏ.எஸ். அதிகாரியான நரேந்திரகுமார் முதல் சென்டாக் அதிகாரிகள் வரை மத்திய அரசின் எந்த உத்தரவையும் மீறவில்லை. இது விசாரணையில் தெரியவரும்.

    மேனன் என்பவர் மூலம் பினாமியாக ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது சுப்ரீம்கோர்ட்டில் உள்ளது. அங்கு அரசு சார்பில் முழுமையான பதில்கள் அளித்துள்ளோம். சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது கவர்னர் அதிகாரிகளை மிரட்டி உங்களை தூண்டியது யார்? என சொல்ல வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இது கிரிமினல் குற்றம்.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர் மீது பழிபோட அதிகாரிகளை கவர்னர் தூண்டுகிறார். கவர்னர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்போம். கவர்னர் தனது வரம்பை மீறி செயல்படுகிறார்.

    தான் ஒரு போலீஸ் அதிகாரி என்ற எண்ணத்தில்தான் கவர்னர் செயல்பட்டு வருகிறார். அதிகாரிகளை மிரட்டும் அதிகாரத்தை கவர்னருக்கு வழங்கியது யார்? பா.ஜனதாவின் ஏஜெண்டாக கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார்.

    ஏற்கனவே நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கவர்னர் தன்னிச்சையாக பதவிபிரமாணம் செய்து வைத்தார். விதிமுறைகளை மீறியதற்கு கவர்னர்தான் பொறுப்பேற்க வேண்டும். உண்மைக்கு புறம்பான தகவல்களை தொடர்ந்து அவர் கூறி வருகிறார். சி.பி.ஐ. விசாரணையில் உண்மைகள் வெளிவரும். கவர்னராக இருக்க கிரண்பேடி தகுதியற்றவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×