search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பாடச்சுமையை குறைக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பாடச்சுமையை குறைக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

    தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே அதிக பாடங்கள் கற்றுக்கொடுப்பதை தடுக்க வேண்டும் என்ற மனுவை மத்திய அரசு பரிசீலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் முதல் வகுப்பிலேயே 8 பாடங்களை பயிற்றுவிக்கின்றன. தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் முதல் வகுப்புக்கு 3 புத்தகங்களே பரிந்துரைக்கிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் நிர்வாகம் கொடுக்கும் புத்தகங்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. முதல் வகுப்பு குழந்தைகள் பொதிமூட்டைபோல புத்தகங்களை சுமந்து செல்வதால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    பள்ளிப்பருவத்தில் அடியெடுத்துவைக்கும் குழந்தைகளுக்கு அதிக பாடங்களை திணிக்கக்கூடாது. எனவே, தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் விதிப்படி தயாரிக்கப்பட்ட புத்தகங்களை வழங்கி அதை கற்றுக்கொடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 3 வயதிலேயே குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவர்களின் குழந்தை பருவத்தையே வீணடிக்கிறோம். துள்ளிக்குதித்து விளையாட வேண்டிய குழந்தைகளின் முதுகில் பொதிமூட்டைபோல புத்தகங்களை சுமக்கவிடுவது அநியாயம். மனுதாரரின் கோரிக்கையை மத்திய அரசும், சி.பி.எஸ்.இ. நிர்வாகமும் 4 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
    Next Story
    ×