search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று ஓராண்டு முடிகிறது: ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சேர்ந்த கருப்பு தினம்
    X

    இன்று ஓராண்டு முடிகிறது: ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சேர்ந்த கருப்பு தினம்

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    சென்னை:

    ஜெயலலிதாவுக்கு உண்மையில் என்னதான் நடந்தது? எதனால் திடீர் என மரணத்தை தழுவினார்? அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஏன் மூடி மறைத்தனர்? 74 நாட்கள் அவர் ஆஸ்பத்திரியில் இருந்தபோது உண்மையில் என்னென்ன நடந்தது?

    -இத்தகைய மர்மங்களுக்கு இன்னமும் முழுமையான விடை கிடைக்கவில்லை. ஜெயலலிதா உடல் நல வி‌ஷயத்தில் ஏற்பட்ட மர்மங்கள் தொடர்ந்து மர்மங்களாகவே நீடிக்கின்றன.

    தமிழக அரசியல் களத்தை 35 ஆண்டுகள் கலக்கிய ஜெயலலிதா, 2015-ம் ஆண்டே உடல் நலக் குறைவால் சற்று தளர்ச்சி அடைந்தார். அப்போதே ஏன் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை? உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சொன்னாலும் கடைசியில் அவர் உயிரை காப்பாற்ற இயலாமல் போய் விட்டதே, ஏன்?

    - இது போன்று ஜெயலலிதா உடல் நலம் பற்றி ஏராளமான கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. இந்த கேள்விக்குறிகள் மக்கள் மனதில் உருவாகி ஓராண்டு ஆகப் போகிறது.

    ஆம்... ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவில்தான் ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார்.

    அந்த செப்டம்பர் 22-ந்தேதியை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. அன்றைய தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதாவை, 74 நாட்களுக்குப் பிறகு சடலமாகத்தான் பார்க்க முடிந்தது.

    முதலில் லேசான காய்ச்சல் என்றனர். பிறகு நீர் சத்து குறைபாடு ஏற்பட்டுவிட்டது என்றனர். மூச்சு விட சிரமப்படுகிறார் என்றனர். ஒரு கட்டத்தில் அவர் சிகிச்சைகள் பற்றி அறிக்கைகள்தான் வந்தது. 74 நாட்கள் இப்படியே சென்றது கடைசியில் டிசம்பர் 5-ந்தேதி அவர் மரணம் அடைந்த தகவல் தான் வெளியானது.

    ஜெயலலிதா மீண்டு வந்து விடுவார் என்றே அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் நினைத்தனர். இதனால் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார் என்ற தகவல் அதிர்ச்சியோடு அவர்களிடம் கேள்விக்குறிகளையும் ஏற்படுத்தியது.

    அந்த கேள்விக்குறிகள் ஓராண்டு கடந்த நிலையில் இப்போதும் கேள்விக்குறிகளாகவே உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை காண விசாரணை நடத்த வேண்டும் என்று சிலர் தர்மயுத்தம் நடத்தினார்கள். இப்போது அவர்கள் குரலும் ஓய்ந்து விட்டது.


    அப்படியானால் ஜெயலலிதாவுக்கு எப்படி உடல் நலக்குறைவு ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? எத்தகைய சிகிச்சை கொடுத்தனர்? என்பன போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையே கிடைக்காதா? அ.தி.மு.க.வினர் எதுவும் புரியாமல் உள்ளனர். அந்த தவிப்பு அவர்களிடம் இன்னும் உள்ளது.

    90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஜெயலலிதாவின் திடீர் மறைவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போதும் அவர்கள் மனங்களில் ஜெயலலிதா சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதை அனைவரும் உணர்கிறார்கள்.

    68 வயது வரை வாழ்ந்த அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழக மக்களுக்கு சேவை செய்திருப்பார்.

    அவர் உடல் நலம் பாதித்த அந்த செப்டம்பர் 22-ந்தேதி அ.தி.மு.க.வினருக்கு கருப்பு நாளாகும். அ.தி.மு.க.வினருக்கு ஏக்கத்தையும் பரிதவிப்பையும் ஏற்படுத்திய அந்த நாளை நினைவு கூறும் முதலாமாண்டு கருப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    Next Story
    ×