search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவிநாசி: தெக்களூர் பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்த விபத்து- அ.தி.மு.க. பிரமுகர்கள் 6 பேர் பலி
    X

    அவிநாசி: தெக்களூர் பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்த விபத்து- அ.தி.மு.க. பிரமுகர்கள் 6 பேர் பலி

    அவிநாசி அருகே தெக்களூர் பாலத்தில் பஸ் மோதியதில் கார் கீழே விழுந்த விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    அவினாசி:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள பாதரை கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக உள்ளார்.

    இவருடன் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அடுத்த கச்சுபள்ளி அருகே உள்ள கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜேம்ஸ் என்கிற ராமு, திருச்செங்கோடு வேளாண்மை விற்பனையாளர்கள் சங்கத்தின் கொங்கணாபுரம் கிளை இயக்குனர் கதிர்வேல்.கொங்கணாபுரம் கச்சுபள்ளியை சேர்ந்த முத்துசாமி, ரத்தினம், ஈரோடு வில்வரசம்பட்டியை சேர்ந்த நல்லதம்பி ஆகிய 6 பேர் டெல்லியில் இன்று நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள கோவை விமானநிலையத்திற்கு அரசு காரில் புறப்பட்டனர். காரை டிரைவர் பாலசுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று காலை 9.30 மணியளவில் கார் அவினாசியை அடுத்த தெக்கலூரில் கோவை - ஈரோடு 6 வழிசாலையில் ஒரு பாலத்தில் வந்து கொண்டிருந்தது. காருக்கு பின்னால் ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென கார் மீது பஸ் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


    இதில் கந்தசாமி உள்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். டிரைவர் மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி, அவினாசி பகுதிகளில் இருந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்பு பலியான கந்தசாமி, ரத்தினம், ராமு, முத்துசாமி, நல்லதம்பி ஆகிய 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான கதிர்வேல் என்பவரின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிய டிரைவர் பாலசுப்பிரமணியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தின் காரணமாக கோவை - ஈரோடு புறவழிச்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர்செய்தனர். இதையடுத்து சுமார் 2 மணிநேரத்திற்கு பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர்கள் 6 பேர் பலியானதையடுத்து நாமக்கல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான அ.தி.மு.க.வினர் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×