search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை மாநில காங்கிரஸ் உள்கட்சி தேர்தல்: பதவிகளை பிடிக்க கடும் போட்டி
    X

    புதுவை மாநில காங்கிரஸ் உள்கட்சி தேர்தல்: பதவிகளை பிடிக்க கடும் போட்டி

    புதுவை மாநில காங்கிரஸ் உள்கட்சி தேர்தலில் பதவிகளை பிடிக்க போட்டா போட்டி நிலவி வருகிறது. பலரும் பதவியை பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் மாநாடு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில், ராகுல்காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதற்கு முன்னதாக மாநில அளவில் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை உள்கட்சி தேர்தலை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி அனைத்து மாநிலங்களிலும் உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதேபோல் புதுவையிலும் இப்போது உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    புதுவையில் பூத் கமிட்டி, வட்டார கமிட்டி, மாவட்ட கமிட்டி, மாநில கமிட்டி என்ற 4 பிரிவாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், பூத் கமிட்டி தேர்தல் தற்போது முடிந்துள்ளது.

    மாநிலத்தில் 840 பூத்கள் உள்ளன. ஒவ்வொரு பூத்திலும் 14 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து வட்டார கமிட்டி தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு தொகுதியும் ஒவ்வொரு வட்டாரமாக பிரிக்கப்பட்டுள்ளது. வட்டார கமிட்டியில் ஒரு தலைவர், 2 துணை தலைவர், ஒரு பொருளாளர், 21 உறுப்பினர்கள், 6 மாவட்ட பிரதிநிதிகள், ஒரு பிரதேச காங்கிரஸ் பிரதிநிதி ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இந்த தேர்தல் பணிகள் இப்போது நடந்து கொண்டு இருக்கின்றன. விரைவில் இது முடிவடையும். அதை தொடர்ந்து மாவட்ட கமிட்டி தேர்தல் நடைபெறும்.

    புதுவையில் மத்திய மாவட்டம், வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம், காரைக்கால் மாவட்டம் என 4 மாவட்ட கமிட்டிகள் உள்ளன. இதற்கும் தலைவர், மற்றும் 31 நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்தல் அனைத்தும் முடிந்ததும் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு, அகில இந்திய உறுப்பினர் தேர்வு நடைபெறும்.

    அடுத்த மாதம் 2-வது வாரத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலை கண்காணிக்க அகில இந்திய காங்கிரசில் இருந்து தேர்தல் அதிகாரியாக ஜக்மோகன்சிங், பென்னி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது பென்னி முன்னிலையில் கீழ்மட்ட தேர்தல் நடந்து வருகிறது. மாவட்ட, மாநில நிர்வாகிகள் தேர்வு தலைமை அதிகாரி ஜக்மோகன்சிங் முன்னிலையில் நடைபெறும்.

    உள்கட்சி தேர்தலில் பதவிகளை பிடிக்க போட்டா போட்டி நிலவி வருகிறது. பலரும் பதவியை பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    பெரும்பாலும் சமரச அடிப்படையிலேயே நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×