search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு அமைப்பின் (ஜாக்டோ- ஜியோ) ஒரு பிரிவினர் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்திலும் பங்கேற்றனர். 7 மாவட்டங்களில் உள் இருப்பு போராட்டமும் நடந்தது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    அரசு ஊழியர் சங்கம், தொடக்கப்பள்ளி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்டவை இதில் கலந்து கொண்டன.

    அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் சென்னையில் எழிலகத்தில் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் சுமார் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    காலவரையற்ற போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பே தலைமை செயலாளர் அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். அரசு ஊழியர்களுக்கு எவ்வித விடுமுறையும் அளிக்கக் கூடாது. மருத்துவ விடுப்புக்கு தகுந்த ஆதாரம் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் “நோ ஒர்க் நோ பே” (வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை) என்ற அடிப்படையில் சம்பளம் வழங்க மாட்டோம் என்றும் எச்சரிக்கப்பட்டது.


    அரசின் உத்தரவு அனைத்து துறை தலைமை அதிகாரிகள் வழியாக ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என கோரிக்கைகளை முன் வைத்து போராடினார்கள்.

    இதற்கிடையில் போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை விதித்த தடையை மீறியும் போராட்டம் நடத்தினர்.

    இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தொடங்கியது. ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அதன் கீழ் செயல்படும் துறை தலைவர் மூலமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

    பள்ளிக் கல்வித்துறை கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ஆசிரியர்களின் சம்பளத்தை பிடிக்கவும் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அதிகாரிகளுக்கு இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்ட 10 நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×