search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறக்க முடியாத செப்டம்பர் 22: ஜெயலலிதாவை அப்பல்லோவில் சேர்த்த கருப்பு தினம் நாளை அனுசரிப்பு
    X

    மறக்க முடியாத செப்டம்பர் 22: ஜெயலலிதாவை அப்பல்லோவில் சேர்த்த கருப்பு தினம் நாளை அனுசரிப்பு

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் நீடிக்கும் மர்மங்களுக்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில், அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட கருப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
    சென்னை:

    ஜெயலலிதா எதனால் திடீர் என மரணத்தை தழுவினார்? அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஏன் மூடி மறைத்தனர்? 74 நாட்கள் அவர் ஆஸ்பத்திரியில் இருந்தபோது உண்மையில் என்னென்ன நடந்தது?

    -இத்தகைய மர்மங்களுக்கு இன்னமும் முழுமையான விடை கிடைக்கவில்லை. ஜெயலலிதா உடல் நல வி‌ஷயத்தில் ஏற்பட்ட மர்மங்கள் தொடர்ந்து மர்மங்களாகவே நீடிக்கின்றன.

    உண்மைகள் வெளிவருமா? பொது மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் நம்பிக்கை இல்லாமல் எதிர் பார்ப்புகளுடன் உள்ளனர்.

    தமிழக அரசியல் களத்தை 35 ஆண்டுகள் கலக்கியவர். 32 ஆண்டுகள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் அரசி போல இருந்தவர். கடைசி 10 ஆண்டுகளில் அவரை சுற்றியே தமிழக அரசியல் சுழன்றது. இத்தகைய ஆற்றல்மிக்க, ஆளுமைமிக்க தலைவிக்கு ஏற்பட்ட முடிவு ஜீரணிக்க முடியாதது.

    இப்போதும் கூட, தமிழ்நாட்டு மக்கள் மனதில் ஜெயலலிதா மரணம் தொடர்பான அடுக்கடுக்கான கேள்விகள் குவிந்து கிடக்கின்றன.

    2015-ம் ஆண்டே ஜெயலலிதா உடல் நலக் குறைவால் சற்று தளர்ச்சி அடைந்தார். அப்போதே ஏன் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை.

    உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சொன்னாலும் கடைசியில் அவர் உயிரை காப்பாற்ற இயலாமல் போய் விட்டதே, ஏன்?

    - இது போன்று ஜெயலலிதா உடல் நலம் பற்றி ஏராளமான கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. இந்த கேள்விக்குறிகள் மக்கள் மனதில் உருவாகி ஓராண்டு ஆகப் போகிறது.

    ஆம்... ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நாளையுடன் ஓராண்டு முடியப் போகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவில்தான் ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார்.

    அந்த செப்டம்பர் 22-ந் தேதியை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.

    அதற்கு முந்தைய தினம் அதாவது செப்டம்பர் 21-ந்தேதி காலை ஜெயலலிதா பங்கேற்ற அரசு விழா நடந்தது.

    சென்னை சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான 2-வது கட்ட மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கும் விழா ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரெயில் போக்குவரத்தைத் தொடங்க, சின்னமலையில் நடந்த விழாவில் மத்திய மந்திரியாக இருந்த வெங்கய்யா நாயுடு நின்று கொடி அசைத்தார்.


    ஜெயலலிதா பச்சை நிறச்சேலையில், பச்சைக் கொடி காட்டி மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கும் அந்த காட்சியை பொதுமக்கள் அகண்ட திரையில் கண்டு களித்தனர். ஜெயலலிதாவை பொதுமக்கள் பார்த்த கடைசி விழா அதுதான்.

    அந்த விழா ஜெயலலிதா பங்கேற்கும் கடைசி விழா என்று நிச்சயமாக யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

    அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக போயஸ் கார்டன் வீட்டில் இருந்து தலைமை செயலகத்துக்கு வந்தபோது ஜெயலலிதா மிக, மிக தளர்ச்சியாகத்தான் காணப்பட்டார். சக்கர நாற்காலியில்தான் அவர் வந்தார்.

    என்றாலும் அவர் முகத்தில் மட்டும் அதே புத்துணர்ச்சியும், மலர்ச்சியும் குறைவின்றி காணப்பட்டது. தன்னைப் பார்த்த ஒவ்வொருவரையும் பார்த்து மெல்லிதாக புன்னகைத்தபடி இருந்தார்.

    முதலில் அவர் சின்னமலையில் நடந்த மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் வெங்கய்யா நாயுடுவுடன் சேர்ந்து கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் சின்னமலைக்கு செல்வதை ரத்து செய்து விட்டு, தலைமை செயலகத்துக்கு வந்தார்.

    அந்த விழாவை சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் சுதா சே‌ஷய்யன் தொகுத்து வழங்கினார். ஜெயலலிதா பங்கேற்ற அந்த கடைசி நிகழ்ச்சி பற்றி அவர் கூறுகையில்......

    ஜெயலலிதா மேடம் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி நடந்து சரியாக ஓராண்டாகிறது. அன்று (செப்டம்பர் 21-ந்தேதி) விழா தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே அவர் வந்து விட்டார்.


    விழாவுக்கு இன்னமும் மத்திய மந்திரி வரவில்லை என்று சொன்னதும் தலைமை செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு நிகழ்ச்சிக்கு சென்றார். பிறகு திரும்பி வந்ததும் உடனே நிகழ்ச்சியை தொடங்கச் சொன்னார்.

    அவர் அந்த நிகழ்ச்சி முழுவதும் அமைதியாக காணப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற எந்த குறிப்பையும் வெளிப்படுத்தவில்லை. 6 நிமிடங்கள்தான் பேசினார்.

    விழா உடனே முடிக்கப்பட்டதும் அவர் எழுந்து மெல்ல நடந்து சென்றார். எங்களைப் பார்த்து சிரித்தபடி நன்றி கூறினார். அந்த சிரித்த முகம்தான் நான் பார்த்த கடைசி முகமாகும்.

    இவ்வாறு கூறிய சுதா சே‌ஷய்யன்தான், அடுத்த 74 நாட்களுக்குப் பிறகு உயிரற்ற ஜெயலலிதாவின் உடலை ‘எம்பாம்’ செய்து பக்குவப்படுத்தும் துரதிர்ஷ்டத்தை சந்தித்தார்.

    21-ந்தேதி அனைவரையும் பார்த்து புன்னகைத்த ஜெயலலிதாவுக்கு மறுநாள் 22-ந்தேதி இரவு 11.30 மணிக்கு உடல் நல பாதிப்பு அதிகரித்தது. உடனே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மறுநாள் (23-ந்தேதி) காலை தமிழ்நாடே பரபரப்புக்குள்ளானது.

    அதன் பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

    முதலில் லேசான காய்ச்சல் என்றனர். பிறகு நீர் சத்து குறைபாடு ஏற்பட்டுவிட்டது என்றனர். மூச்சு விட சிரமப்படுகிறார் என்றனர். ஒரு கட்டத்தில் அவர் சிகிச்சைகள் பற்றி அறிக்கைகள்தான் வந்தது.


    74 நாட்கள் இப்படியே சென்றது கடைசியில் டிசம்பர் 5-ந்தேதி அவர் மரணம் அடைந்த தகவல் வெளியானது.

    ஜெயலலிதா மீண்டு வந்து விடுவார் என்றே அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் நினைத்தனர். இதனால் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார் என்ற தகவல் அதிர்ச்சியோடு அவர்களிடம் கேள்விக்குறிகளையும் ஏற்படுத்தியது.

    அந்த கேள்விக்குறிகள் ஓராண்டு கடந்த நிலையில் இப்போதும் கேள்விக்குறிகளாகவே உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை காண விசாரணை நடத்த வேண்டும் என்று சிலர் தர்மயுத்தம் நடத்தினார்கள். இப்போது அவர்கள் குரலும் ஓய்ந்து விட்டது.

    அப்படியானால் ஜெயலலிதாவுக்கு எப்படி உடல் நலக்குறைவு ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? எத்தகைய சிகிச்சை கொடுத்தனர்? என்பன போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையே கிடைக்காதா? அ.தி.மு.க.வினர் எதுவும் புரியாமல் உள்ளனர். அந்த தவிப்பு அவர்களிடம் இன்னும் உள்ளது.

    90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஜெயலலிதாவின் திடீர் மறைவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போதும் அவர்கள் மனங்களில் ஜெயலலிதா சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.

    தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல.... தேசிய அரசியலிலும் அவர் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். இதனால்தான் அவர் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதை அனைவரும் உணர்கிறார்கள்.

    தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் ஏற்கனவே இடம் பிடித்திருந்தார். 1981-ம் ஆண்டு அவர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்து தீவிர அரசியலுக்கு வந்தபோது தமிழக மக்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுத்தனர்.

    எம்.ஜி.ஆர். தனக்குப் பதிலாக தமிழகத்தின் மூலை முடுக்குக்கு எல்லாம் ஜெயலலிதாவை அனுப்பினார். அப்போது எம்.ஜி.ஆருக்கு திரள்வது போல மக்கள் கூட்டம் ஜெயலலிதாவுக்கும் திரண்டது.

    எம்.ஜி.ஆர். எப்படி மக்களையும், அ.தி.மு.க. தொண்டர்களையும் தன் பக்கம் காந்தம் போல ஈர்த்தாரோ, அதே போன்று ஜெயலலிதாவும் ஈர்த்தார். எம்.ஜி.ஆரை பாமர மக்கள் எந்த அளவுக்கு நம்பினார்களோ... அதே அளவுக்கு ஜெயலலிதாவையும் நம்பினார்கள்.

    அந்த நம்பிக்கை காரணமாகத்தான் ஜெயலலிதா மிக, மிக எளிதாக, மிக, மிக வேகமாக அரசியலின் உச்சத்துக்கு வர முடிந்தது. துரோகங்கள், தோல்விகள், மிரட்டல்கள் அவருக்கு அடிக்கடி இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அரசியல் ஆற்றில் ஜெயலலிதா எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டார்.

    அரசியலுக்கு வந்த பத்தே ஆண்டுகளில் அதாவது 1991-ம் ஆண்டு அவர் முதல்- அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். மற்ற மாநில அரசியல்வாதிகளும், தேசியக் கடசிகளின் அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவை பிரமிப்புடன் பார்த்தனர்.

    1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. சொத்துக் குவிப்பு வழக்கு உள்பட பல வழக்குகள் அவரை ஆக்டோபஸ் போல சூழ்ந்தன.

    இதில் 99 சதவீத வழக்குகளில் ஜெயலலிதா வெற்றி கண்டார். அரசியலில் இடையில் சிறு சறுக்கலை அவர் சந்திக்க நேரிட்டது.

    சறுக்கலில் விழுந்தவர் இனி எழுந்திருக்க மாட்டார் என்று பலரும் நினைத்தனர். ஆனால் மக்கள் கொடுத்த ஆதரவு காரணமாக மீண்டும், மீண்டும் அரசியல் உச்சத்துக்கு வந்தார்.

    5 தடவை அவர் முதல்-அமைச்சர் பதவியை ஏற்று தான் ஒரு இரும்புப் பெண்மணி என்பதை நிரூபித்தார்.

    2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று தமிழக அரசியலில்தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை ஜெயலலிதா உணர்த்தினார்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் 39 இடங்களை கைப்பற்றி இந்தியாவையே ஆச்சரியப்படுத்தினார். பாராளுமன்றத்தில் 50 எம்.பி.க்களுடன் அ.தி.மு.க.வை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றினார்.

    திராவிட இயக்க தலைவர்களில் யாருமே செய்யாத சாதனை இது. அந்த வகையில் திராவிட தலைவர்களில் ஜெயலலிதா தனித்துவத்துடன் மிளிர்ந்தார்.

    2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதும் ஜெயலலிதா மிகவும் நெகிழ்ந்து போனார். தமிழ்நாட்டு மக்கள் தன் மீது இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்களே என்று வாஞ்சையோடு பார்த்தார்.

    தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் அவர் உண்மையிலேயே வாளும் கேடயமுமாக இருந்தார். அவர் அரணாக இருந்ததால்தான் மத்திய அரசாலும், மற்றவர்களாலும் தமிழ்நாட்டை சீண்டி பார்க்க முடியாத நிலை இருந்தது.

    68 வயது வரை வாழ்ந்த அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழக மக்களுக்கு சேவை செய்திருப்பார். அவர் உடல் நலம் பாதித்த அந்த செப்டம்பர் 22-ந்தேதி அ.தி.மு.க.வினருக்கு கருப்பு நாளாகும்.

    நாளை அந்த முதலாண்டு கருப்பு நாளாகும்... அ.தி.மு.க. வினருக்கு ஏக்கத்தையும் பரிதவிப்பையும் ஏற்படுத்திய நாள்! விடை காண முடியாத மர்மங்கள் சூழ்ந்த நாள் என்றும் சொல்லலாம்.
    Next Story
    ×