search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவேற்காட்டில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் தப்பி ஓட்டம்
    X

    திருவேற்காட்டில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் தப்பி ஓட்டம்

    திருவேற்காட்டில் இன்று காலை பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தப்பியோடிய 2 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    திருவேற்காட்டை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வருபவர் பரமானந்தம் (வயது 49). பாரதிய ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார்.

    இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு ஹரீஷ், செபஸ்டின் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று இரவு பரமானந்தம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் முன் பக்க அறையில் தூங்கினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் ஜன்னல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.

    அப்போது 2 மர்ம நபர்கள் உடைந்த ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டை வீட்டுக்குள் வீசினர். பெட்ரோல் குண்டு அறையில் இருந்த சோபாவில் விழுந்து வெடித்தது. இதனால் சோபா முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

    அதில் இருந்து தெறித்த பெட்ரோல் அருகில் நின்ற பரமானந்தத்தின் பனியனில் விழுந்து தீப்பிடித்தது. உடனடியாக அவர் தீயை அணைத்தார்.

    இதற்குள் குண்டு சத்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.


    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் தீயை அணைத்து அங்கு நின்ற 2 மர்ம வாலிபர்களையும் விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் இருளில் தப்பி ஓடி விட்டனர்.

    வீசப்பட்ட பெட்ரோல் குண்டு சோபாவில் விழுந்து வெடித்ததால் பரமானந்தமும், அவரது குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    தப்பி ஓடிய மர்ம நபர்கள் 2 பேரும் ஜட்டி மட்டுமே அணிந்து இருந்தனர். திட்டமிட்டு அவர்கள் பரமானந்தம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருப்பது தெரிந்தது.

    பொதுமக்கள் விரட்டிய போது சிறிது தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தில் கூட்டாளிகளுடன் அவர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் சாண்டர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். தப்பி ஓடியவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரமானந்தம் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதிலும் சிலருடன் தகராறு இருந்து வருவதாக தெரிகிறது. இந்த மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்றும் விசாரணை நடக்கிறது.

    நான் கடந்த 4 வருடமாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன். பாரதிய ஜனதா சார்பில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வந்தேன். இது சிலருக்கு பிடிக்கவில்லை. எனது வளர்ச்சி பிடிக்காமல் அடிக்கடி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.


    கடந்த சிலமாதங்களாகவே எனது செல்போனுக்கு நள்ளிரவில் அழைப்புகள் வரும். அதில் பேசும் மர்ம நபர்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு டெலிபோன் நம்பரில் இருந்து இந்த அழைப்புகள் வந்தன.

    இது குறித்து போலீசில் புகார் தெரிவித்து இருந்தேன். கடந்த ஒரு வாரமாக மிரட்டல் இல்லை. ஆனால் இப்போது வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டனர். குற்றவாளிகளை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்தினர் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பரமானந்தம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பற்றி அறிந்ததும் மாவட்ட தலைவர் லோகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    சமீப காலமாக தமிழகத்தில் பாரதிய ஜனதா பிரமுகர்கள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் அதிகரித்து வருகிறது. தற்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பை அதிகரித்து உள்ளது.
    Next Story
    ×