search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்காரி மணிமேகலை, ஐஸ்வர்யா மற்றும் சுமித்ரா
    X
    கடத்தல்காரி மணிமேகலை, ஐஸ்வர்யா மற்றும் சுமித்ரா

    குழந்தை கடத்தல்காரி மணிமேகலை பற்றி பரபரப்பு தகவல்கள்

    சென்னை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்தி சென்ற மணிமேகலை, போலீஸ் அதிகாரியாகவும், வக்கீலாகவும் நடித்து தமிழகத்தையே கலக்கியவர் என்று அவரைப்பற்றி தகவல்களை போலீஸ் இணை கமிஷனர் வெளியிட்டார்.
    சென்னை:

    சென்னை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்தி சென்ற கடத்தல்காரி மணிமேகலை, போலீஸ் அதிகாரியாகவும், வக்கீலாகவும் நடித்து தமிழகத்தையே கலக்கியவர் என்று அவரைப்பற்றி பரபரப்பான தகவல்களை போலீஸ் இணை கமிஷனர் சுதாகர் வெளியிட்டார்.

    சென்னையில் இதுபற்றி நேற்று மாலை போலீஸ் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 15 நாட்களே ஆன பெண்குழந்தை காரில் கடத்திச்செல்லப்பட்டது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குழந்தையின் தாயார் மணிமேகலை (வயது 22) கொடுத்த புகாரின் பேரில், அரசு பொது மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அதன்பேரில் தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த 14 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை சேலத்தில் மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த வழக்கில் சேலத்தை சேர்ந்த மற்றொரு மணிமேகலை (29), ஐஸ்வர்யா (25), மற்றும் சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த சுமித்ரா (33) ஆகிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகவும், மூளையாகவும் செயல்பட்டவர் சேலம் மணிமேகலை ஆவார். இவர் முதல் கணவரை பிரிந்துவிட்டு, 2-வதாக தீனதயாளன் என்ற ஆட்டோ டிரைவரை காதலித்து மணந்துள்ளார். பிளஸ்-2 வரை படித்துள்ளார்.

    இவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்தியது ஏன்? என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

    இவர் சேலத்தில் இருந்து அடிக்கடி சென்னை வருவார். சேப்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்குவார். சேலத்தில் உதவி போலீஸ் கமிஷனராக வேலை பார்ப்பதாக இவர் கூறுவார். சேலத்தில் வக்கீல் தொழில் செய்வதாகவும் கதை விடுவார். வாடகை காரில் பந்தாவாக சுற்றுவார்.

    கைது செய்யப்பட்டுள்ள சுமித்ரா, சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். குழந்தையை பறிகொடுத்த மணிமேகலை, குழந்தை பெறுவதற்காக எழும்பூர் மருத்துவமனையில் சேரும்போது, சுமித்ராவோடு பழகியுள்ளார். மணிமேகலைக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. 2-வதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை தத்து கொடுக்க உள்ளதாக சுமித்ராவிடம் மணிமேகலை கூறியிருக்கிறார்.

    இந்த தகவலை சேலம் மணிமேகலைக்கு சுமித்ரா தெரிவித்தார். உடனே அவர், ஐஸ்வர்யா என்ற பெண்ணை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார். குழந்தைக்கு ரூ.30 ஆயிரம் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். குழந்தையின் தாயான மணிமேகலையை சேலத்துக்கு அழைத்துச்சென்று நல்ல வேலை வாங்கிக்கொடுப்பதாகவும் ஆசை காட்டியுள்ளனர். பின்னர் நைசாக குழந்தையை மட்டும் வாடகை காரில் கடத்திச்சென்றுள்ளனர். கோயம்பேடு வரை வாடகை காரில் சென்றுவிட்டு அங்கிருந்து பஸ் மூலம் சேலத்திற்கு சென்றுள்ளனர்.

    தனிப்படை போலீசார் முதலில் சுமித்ராவை கைது செய்தனர். சுமித்ரா கொடுத்த தகவல் அடிப்படையில் சேலத்தில் வைத்து மணிமேகலையும், ஐஸ்வர்யாவும் கைது செய்யப்பட்டனர்.

    கைதான மணிமேகலையிடம் விசாரித்தபோது அவர், சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்காக குழந்தையை கடத்திச்சென்றோம் என்று தெரிவித்துள்ளார். அதுபற்றி விசாரணை நடக்கிறது. மணிமேகலை அவரது தங்கை என்று சொல்லப்படும் ஐஸ்வர்யா மற்றும் சுமித்ரா ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்த உள்ளோம்.

    கைதான மணிமேகலை மீது வேறு வழக்குகள் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். மீட்கப்பட்ட குழந்தையும், தாயார் மணிமேகலையும் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள்.

    இவ்வாறு இணை கமிஷனர் சுதாகர் கூறினார்.

    கடத்தல்காரி மணிமேகலைக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்குமா? என்று இணை கமிஷனரிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அவரை பற்றி முழுமையாக விசாரித்து வருகிறோம். அவருடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய உள்ளோம். அதன்பிறகு தான் அடுத்தக்கட்ட விவரங்கள் பற்றி சொல்ல முடியும்’ என்று தெரிவித்தார்.

    குழந்தையின் தாயார் மணிமேகலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    “குடிப்பழக்கத்திற்கு ஆளான கணவர் கைவிட்டதால் பிழைப்புக்கு வழியில்லை. திருவள்ளூரில் ஒரு கோவிலில் தங்கி பிழைப்பு நடத்தினேன். 2 பெண் குழந்தைகளையும் வளர்க்க முடியாது என்பதால் தற்போது பிறந்துள்ள குழந்தையை தத்து கொடுக்க விரும்பினேன்.

    என்னையும், எனது முதல் குழந்தையையும் நன்றாக பார்த்துக்கொள்கிறோம் என்று ஆசை வார்த்தைக்கூறி என்னை ஏமாற்றிவிட்டனர்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×