search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரம்
    X

    திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரம்

    திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    திருவாரூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம், நெல் உற்பத்தியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னிலை வகித்து வருகிறது. காவிரி பிரச்சினை காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. வழக்கம்போல இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதே நேரத்தில் போதிய அளவு மழையும் பெய்யவில்லை. இதனால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இன்றி திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தவித்தனர்.

    கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து போனது. இது மோட்டார் பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருபவர்களுக்கு சிரமம் தந்தது. பல்வேறு இடையூறுகளை தாண்டி திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர். மோட்டார் பாசனம் மூலம் கிடைத்த தண்ணீரை பயன்படுத்தி 23 ஆயிரத்து 324 எக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இவ்வாறு மோட்டார் பாசனம் மூலம் நடைபெற்ற குறுவை பயிர் தற்போது அறுவடை பருவத்தை எட்டி உள்ளது.

    இதையடுத்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அறுவடை பணிகள் வேளாண்மை பொறியியல் துறைக்கு சொந்தமான எந்திரங்கள் மூலமாகவும், தனியார் அறுவடை எந்திரங்கள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 1,700 எக்டேர் பரப்பில் குறுவை நெல் அறுவடை முடிவடைந்து விட்டதாக வேளாண்மை அதிகாரிகள் கூறி உள்ளனர். எக்டேருக்கு 6 டன் வரை நெல் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×