search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: புகைப்பட கண்காட்சியை தம்பிதுரை தொடங்கி வைத்தார்
    X

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: புகைப்பட கண்காட்சியை தம்பிதுரை தொடங்கி வைத்தார்

    நாகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திறந்து வைத்தார்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டத்தில் நாகை ஒன்றியம் பாலையூரில் இன்று (புதன்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது.

    இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி நாகை ஒன்றியம் பாலையூர் கிழக்கு கடற்கரை சாலை அருகே பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நாகை முழுவதும் சாலைகளில் அலங்கார வளைவுகள், வாழ்த்து பேனர்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    முன்னதாக இன்று காலை செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், கோபால் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். ரவி பெர்ணான்டஸ் தொகுத்து வழங்கினார்.

    பின்னர் பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவிற்கு சட்டசபை சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.



    முன்னதாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்கிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகிறார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவ படத்தினை திறந்து வைத்து, நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், அதனை தொடர்ந்து ரூ.100.23 கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் சார்பில் 46 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 38 ஆயிரத்து 248 பயனாளிகளுக்கு ரூ.281.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
    Next Story
    ×