search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
    X

    குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

    எலச்சிபாளையம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    நாமக்கல்:

    எலச்சிபாளையம் அருகே உள்ள போக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    போக்கம்பாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் தெருக்களில் உள்ள குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் போதிய மழை இல்லாத காரணத்தால் கடுமையான வறட்சி ஏற்பட்டதை தொடர்ந்து, தெரு குழாய்கள் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து எங்கள் ஊரில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே பொதுக்குழாய் ஒன்றை அமைத்து அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.

    தற்போது பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே அந்த குழாயில் இருந்து வெளியேறும் நீர் சாக்கடைபோல் தேங்குவதால் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீரை தெருக்களில் உள்ள குழாய் மூலம் திறந்து விடக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தோம். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தெருகுழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்து எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

    இதேபோல் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல்லில் இருந்து 45 கி.மீட்டர் தொலைவில் மல்லசமுத்திரம் அமைந்து உள்ளது. தற்போது திருச்செங்கோடு தாலுகாவை தலைமையிடமாக கொண்டு மல்லசமுத்திரம் பிர்கா செயல்பட்டு வருகிறது. இந்த பிர்காவுடன் வையப்பமலை மற்றும் ராசிபுரம் தாலுகாவில் உள்ள வெண்ணந்தூர் ஆகிய பிர்காவை இணைத்து மல்லசமுத்திரத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அலுவலகம் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு தனி தாலுகா அமைப்பதினால் 3 பிர்காவிலும் வசிக்கும் மக்களுக்கு எவ்விதமான போக்குவரத்து சிரமும் ஏற்படாது. மல்லசமுத்திரம் தனி தாலுகா உருவாகும் பட்சத்தில் பொதுமக்கள், ஏழை, எளிய மாணவர்கள் சுமார் 1½ லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×