search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
    X

    நாகையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

    பயிர்க் காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் 2016-17-ம் ஆண்டு பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத காப்பீட்டு தொகை வழங்கக்கோரி நாகை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திரண்டு வந்தனர்.

    ஆனால் அவர்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கும் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்கப்படாததால், விவசாயிகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். எனவே சாலை மறியலை கைவிடுமாறு கேட்டு கொண்டனர். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தனர்.

    நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சேரன் முன்னிலை வகித்தார். பயிர்க் காப்பீட்டு தொகை வழங்குவதில் குளறுபடி செய்துள்ள காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், அமுதாராணி, ஜெயக்குமார் மற்றும் போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகளுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகை வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே 2016-17-ம் ஆண்டுக்கு பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×