search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘சிலீப்பர் செல்கள்’ ஆட்சியை கவிழ்த்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைய வாய்ப்பு: விஜயதரணி எம்.எல்.ஏ. பேட்டி
    X

    ‘சிலீப்பர் செல்கள்’ ஆட்சியை கவிழ்த்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைய வாய்ப்பு: விஜயதரணி எம்.எல்.ஏ. பேட்டி

    டிடிவி தினகரன் கூறிய ‘சிலீப்பர் செல்கள்’ ஆட்சியை கவிழ்த்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது என்று விஜயதரணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி இன்று மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கோர்ட்டில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

    இதுபோல தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையை கூட்டி எடப்பாடி தலைமையிலான ஆட்சி, மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று மனு செய்துள்ளனர். ஒரு வாரத்திற்குள் இந்த மனுக்கள் மீதான உத்தரவை கோர்ட்டு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

    சபாநாயகரின் நடவடிக்கை குறித்து கோர்ட்டு கேள்வி எழுப்பலாம். அப்போது சபாநாயகரிடமும் விளக்கம் கேட்கப்படும். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் விவாதம் நடைபெறும். அதன் பிறகே தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது.

    அரசியலமைப்பு அட்டவணை 10-ன் படியும், 1986 சட்டசபை விதிகளின் படியும் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது முறையாக நடைபெறவில்லை. எனவே 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்றே கோர்ட்டு கூறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    இவ்வாறு தீர்ப்பு வரும்பட்சத்தில் இப்போதைய எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    இது தவிர இப்போதும் எடப்பாடியுடன், தினகரனின் ஆதரவு சீலிப்பர் செல்கள் 12 பேர் இருப்பதாக கூறி உள்ளனர். இவர்கள் ஆட்சிக்கு எதிராக திரும்பினாலும் ஆட்சி கவிழ்ந்து விடும்.

    மேலும் 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மக்களும், இந்த ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இதுவும் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் இப்போது நடக்கும் எடப்பாடி ஆட்சிக்கு பாரதிய ஜனதா, பின்னணியில் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி கவிழ்ந்ததும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகளே இப்போது நடந்து வருகிறது.

    மாறாக ஆட்சி கவிழ்ந்ததும், பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் சட்டம். அதை நிறைவேற்றுவார்களா? என்பது சந்தேகம்.

    தமிழகத்தில் ஆட்சி கலைந்து பொதுத்தேர்தல் நடந்தால் தி.மு.க-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே அமோக வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் முதல்வராவார். இதனை தடுப்பதற்கு அவர்கள் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம்.

    இப்போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் மீதான மோசடி வழக்குகளை உயிர்ப்பித்து கைது செய்ய முயற்சி நடக்கிறது. இது உள்நோக்கம் கொண்டது. உண்மையிலேயே இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், இவர்கள் அமைச்சராக இருந்தபோதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    இரட்டை இலை சின்னத்தை மீட்டு விட எடப்பாடி-ஓ.பி.எஸ். அணிகள் இணைந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர். இது பலன் தருமா? என்பது சந்தேகமே. இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் சசிகலாவிடமும் கருத்து கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×