search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொகுதியை மறந்த எம்.எல்.ஏ.யை தகுதி நீக்கம் செய்ததில் தவறில்லை: சாத்தூர் தொகுதி மக்கள் ஆவேசம்
    X

    தொகுதியை மறந்த எம்.எல்.ஏ.யை தகுதி நீக்கம் செய்ததில் தவறில்லை: சாத்தூர் தொகுதி மக்கள் ஆவேசம்

    சொந்த தொகுதியை மறந்த எம்.எல்.ஏ.யை தகுதி நீக்கம் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று சாத்தூர் தொகுதி மக்கள் தங்கள் குமுறல்களை தெரிவித்துள்ளனர்.
    சாத்தூர்:

    கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. எதிர்க்கோட்டை சுப்பிரமணியனும் ஒருவர்.

    அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதானா? என்று தொகுதி மக்களிடம் கேட்டபோது அவர்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினர்.

    ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சாவித்திரி கூறியதாவது:-

    ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் அரங்கேறும் நிகழ்ச்சிகளை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஜெயலலிதா இருந்தபோது வாய்மூடி மவுனியாக இருந்தவர்கள் இன்று இஷ்டத்துக்கு ஏதேதோ பேசுகிறார்கள்.

    அவர் இறந்த பின்னர் பதவிச் சண்டைக்குத்தான் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்களே தவிர, பொதுமக்களை பற்றி யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை.

    எங்கள் எம்.எல்.ஏ. தொகுதி பக்கம் தலைகாட்டி பல மாதங்களாகிவிட்டது. தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை. ரே‌ஷன் கடைகளிலும் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. பொதுமக்கள் குறைகளை தொகுதி எம்.எல்.ஏ.விடம்தான் கூறுவார்கள். ஆனால் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. ஊர் ஊராகத் திரிகிறார். தொகுதி மக்களை மறந்து சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.

    அப்படிப்பட்டவர் எம்.எல்.ஏ.வாக இருந்தால் என்ன? போனால் என்ன? எங்களுக்கு கவலை இல்லை. எதிர்க்கோட்டை சுப்பிரமணியனை தகுதி நீக்கம் செய்தது சரிதான்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    சாத்தூரைச் சேர்ந்த விஜயலட்சுமி கூறும் போது, ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் சாத்தூர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை. எம்.எல்.ஏ.யை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்றால் அவர் ஊர்க்குருவி பறவையாக வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்று தங்கி சொகுசு ஓட்டல்களில் மகிழ்ச்சியாக உள்ளார்.

    ஆனால் தொகுதி மக்கள் அத்தியாவசிய தேவையைக்கூட நிறைவேற்ற சிரமப்படுகிறார்கள். அவர்களது பதவியை காப்பாற்றிக்கொள்ளவே சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சேவையை மறந்து எப்போது தன்னை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாரோ அப்போதே எங்களுக்கு அவர் தேவையில்லை. இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. எதிர்க்கோட்டை சுப்பிரமணியனை தகுதி நீக்கம் செய்ததில் எந்த தவறும் இல்லை என்றார்.

    சாத்தூர் மேலகாந்தி நகரைச் சேர்ந்த கந்தசாமி கூறியதாவது:-

    கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அவர் கூறுவது போல் தினகரன் ஆதரவாளர்கள் வேறு எந்த கட்சிக்கும் செல்லவில்லை. அதே கட்சியில்தான் இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்றுதான் கவர்னரிடம் கோரிக்கை கடிதம் கொடுத்தனர். அவர்களை பதவி நீக்கம் செய்தது திட்டமிட்ட சதியாகும்.

    சசிகலா குடும்பத்தினரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த நாடகம் அரங்கேறியுள்ளது.

    நியாயப்படி பார்த்தால் ஓ.பி.எஸ். அணியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது கட்சிக்கு எதிராகவே வாக்களித்தனர். எனவே அவர்களைத்தான் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
    Next Story
    ×