search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்பிடிப்பு பகுதியில் கன மழை: பெரியாறு அணை ஒரே நாளில் 1½ அடி உயர்வு
    X

    நீர்பிடிப்பு பகுதியில் கன மழை: பெரியாறு அணை ஒரே நாளில் 1½ அடி உயர்வு

    நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் பெரியாறு அணை நீர் மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது.
    கூடலூர்:

    தேனி அருகே கேரள எல்லைப்பகுதியான தேக்கடி பகுதியில் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. 156 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

    கடந்த சில நாட்களாக பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று நீர் பிடிப்பு பகுதியில் விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஒரே நாளில் நீர் மட்டம் 1½ அடி உயர்ந்துள்ளது. நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

    நேற்று 124.70 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று 126.10 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று தண்ணீர் வரத்து 1135 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. அது இன்று 3655 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 218 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பெரியாறு அணையில் முதல் போக சாகுபடிக்கான தண்ணீர் போதுமானதாக உள்ளது. எனவே அணை 25-ந் தேதி திறக்கப்பட உள்ளது.

    கேரள பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை நீடிக்குமானால் விடுமுறை தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வைகை அணை நீர் மட்டம் 36.81 அடியாக உள்ளது. அணைக்கு 61 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர் குடிநீருக்காக 40 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 55 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் 94 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.53 கன அடியாக உள்ளது. அணைக்கு 110 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை அளவு விபரம் வருமாறு:-

    பெரியாறு 65.2, தேக்கடி 40.2, கூடலூர் 11, சண்முகாநதி அணை 6, உத்தமபாளையம் 10, வீரபாண்டி 11, வைகை அணை 4.6 அணைகளில் தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×