search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவையில்லா செலவினத்துக்கு ஒப்புதல் அளிப்பதில்லை: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி
    X

    தேவையில்லா செலவினத்துக்கு ஒப்புதல் அளிப்பதில்லை: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி

    தேவையில்லா செலவினத்துக்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கவர்னர் கிரண்பேடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கவர்னர் தொடர்ந்து மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார் என்று புகார் தெரிவித்திருந்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கவர்னர் கிரண்பேடி கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர், யார் வளர்ச்சி? எந்த வளர்ச்சி? எப்போது வளர்ச்சி? என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும். புதுவை மக்களின் நலனுக்காகவே செயல்படுகிறேன். எந்த திட்டத்தையும் நான் முடக்கவில்லை. அப்படி இருந்தால் அதை அவர் மக்களிடம் காட்டலாம்.

    ஒரு நிர்வாகி என்ற முறையில் நிதி பொறுப்பு எனக்கு உள்ளது எந்தவொரு தேவையில்லா செலவினத்துக்கும் ஒப்புதல் அளிப்பதில்லை.இதன் மூலம் புதுவை மாநில வளர்ச்சிக்கு பாடுபடுகிறேன். அரசுக்கு நிர்வாக மேலாண்மை மற்றும் வருவாயை ஈட்டுமாறு ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.


    என்னிடம் வரும் கோப்புகளை எந்த ஒரு கால தாமதமும் செய்யாமல் அனுப்புகிறேன். சில கோப்புகள் தொடர்பாக முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக பதில்கூட கிடைக்கவில்லை. இவை தொடர்பாக மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளேன்.

    இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

    மேலும் கடந்த ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக இடஒதுக்கீட்டில் முறைகேடாக சேர்க்கை பெற்ற மாணவர்கள் 767 பேரை வெளியேற்ற மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதில், 186 மாணவர்கள் சென்டாக்கில் விண்ணப்பிக்காமலேயே சேர்க்கை பெற்றுள்ளனர். இது, மிகப் பெரிய விதிமீறல் ஆகும்.

    இதுகுறித்து பத்திரிகை செய்தியையும் பதிவிட்டுள்ள கவர்னர் கிரண் பேடி, இந்த வி‌ஷயம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய லஞ்ச ஒழிப்பு கமி‌ஷன் இதில், நிர்வாக தவறுகள் நடந்திருப்பதை கண்டுபிடித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×