search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மத்திய மந்திரிகள் மரக்கன்றுகள் நட்டனர்
    X

    சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மத்திய மந்திரிகள் மரக்கன்றுகள் நட்டனர்

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தூய்மையே சேவை’ திட்டத்தின் கீழ் மத்திய மந்திரிகள் சென்னையில் மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து நடந்த மருத்துவ முகாம்களிலும் பங்கேற்றனர்.
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் நடந்த மருத்துவ முகாமை மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார். உடன் மத்திய இணை மந்திரி மனோஜ் சின்கா, மாநில பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இருந்தனர்.

    ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் அடுத்த கட்டமாக ‘தூய்மையே சேவை’ என்ற பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார். இதையொட்டி பல்வேறு தூய்மைப்பணிகள் நாடெங்கும் நடத்தப்படுகின்றன. குப்பைக்கூளங்களை அகற்றுதல், பொது இடங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் மரம் நடும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வகையில் சென்னையில் கே.கே. நகரில் உள்ள புறநகர் அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



    இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், தகவல்துறை மற்றும் ரெயில்வே இணை மந்திரி மனோஜ் சின்கா ஆகியோர் பங்கேற்றனர். பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அனைவரையும் வரவேற்றார். மருத்துவமனை வளாகத்தில் புதர் மண்டியிருந்த இடங்களில் இருந்து புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. குப்பைக் கூளங்கள் நீக்கப்பட்டன.

    வெள்ளையடித்த மந்திரி மந்திரிகளுடன் இணைந்து பா.ஜ.க. தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனை சுற்றுச்சுவரில் மந்திரி பியூஷ் கோயல் வெள்ளையடித்தார். இதைத்தொடர்ந்து மந்திரிகளும், கட்சி தொண்டர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.

    பின்னர் மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த நாட்டின் பிரதான சேவகரான பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டுள்ளார். இந்த நாட்டை தூய்மையான நாடாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தை நடத்தி வருகிறார். மகாத்மா காந்தி சத்தியாகிரகத்தை கையில் எடுத்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது போல, பிரதமர் நரேந்திர மோடி சுவச்சாகிரகத்தை (தூய்மை போராட்டம்) கையில் எடுத்துக்கொண்டுள்ளார்.

    இன்று (நேற்று) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள். இந்த தினத்தை மக்களுக்கு சேவை புரியும் நாளாக நாங்கள் கொண்டாட முடிவு எடுத்து தூய்மைப்பணி, மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்.
    தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘தூய்மையே சேவை’ திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று மாலை மத்திய ரெயில்வே இணை மந்திரி மனோஜ் சின்கா வருகை தந்தார்.

    பின்னர், ‘தூய்மையே சேவை’ திட்டத்தின்படி, ரெயில் நிலையத்துக்கு முன் இருந்த பஸ் நிலையத்தின் நிழற்குடைக்கு வர்ணம் பூசினார். பஸ் நிலையத்தின் சாலையை தூய்மைபடுத்தினார். ரெயில்வே வளாகத்துக்குள் மரக்கன்றுகளை நட்டார். மேலும் சுத்தம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தி ரெயில் நிலையத்துக்குள் தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டார். அவருடன் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி, கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா ஆகியோரும் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.

    அப்போது மந்திரி மனோஜ் சின்கா கூறுகையில், “மற்ற ரெயில்வே மண்டலங்களை விட தெற்கு ரெயில்வே தூய்மையாக உள்ளது” என்று பாராட்டினார்.
    Next Story
    ×