search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடிய,விடிய போராட்டம் - 3075 பேருக்கு நோட்டீஸ்
    X

    கோவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடிய,விடிய போராட்டம் - 3075 பேருக்கு நோட்டீஸ்

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோ சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர். 3075 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    கோவை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே சமைத்து சாப்பிட்ட அவர்கள் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இரவு 8 மணி அளவில் வெளியில் இருந்து தக்காளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் பொட்டலங்கள் வாங்கி வந்து பரிமாறப்பட்டன.

    அப்போது திடீரென கனமழை பெய்தது. இரவு 9 மணி வரை கனமழை பெய்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சிலர் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே தரையில் படுத்து உறங்கினர்.

    விடிய, விடிய இவர்களது போராட்டம் நீடித்தது. இதில் பெண் ஊழியர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடித்தது. காலையில் உப்புமா தயார் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே கோவையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3,075 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் நீங்கள் ஏன் பணிக்கு வரவில்லை என விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் 24 மணி நேரத்திற்குள் இந்த நோட்டீசுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    விளக்கம் அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்கிறது.
    Next Story
    ×