search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனை எதிர்ப்பவர்கள் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த தயாரா?: செந்தில் பேட்டி
    X

    தினகரனை எதிர்ப்பவர்கள் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த தயாரா?: செந்தில் பேட்டி

    டி.டி.வி. தினகரனை எதிர்ப்பவர்கள் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா என்று நடிகர் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னை:

    நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதுகுறித்து, நடிகர் செந்திலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் முறைப்படி பொதுச் செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் சின்ன அம்மா சசிகலா. அவரால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன்.

    நேற்று பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள். இதில் சசிகலாவால் முதல்- அமைச்சராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியும், பதவிக்காக அவருடன் சேர்ந்து இருக்கும் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வமும் அவர்களுடைய ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்களாலும், அ.தி.மு.க. தொண்டர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்குவதாக தீர்மானம் போட்டு இருக்கிறார்கள். இது செல்லாது. கோர்ட்டில் இது நிரூபிக்கப்படும்.

    அம்மா மறைவுக்குப் பிறகு தொண்டர்களை கட்டித் காத்தவர் சின்னஅம்மா சசிகலா. நேற்று கூட்டம் போட்டவர்கள் அனைவரும் சசிகலா கட்சி தலைவர் ஆக வேண்டும், முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று காலில் விழுந்து முன்பு கெஞ்சினார்கள். இப்போது வீரவசனம் பேசுகிறார்கள்.

    முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த பதவியை கொடுத்தவர் சின்ன அம்மா சசிகலா. இவர் தலைமையில் கூட்டம் போட்டு சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் போடும் எடப்பாடி பழனிசாமி முதலில் அவருடைய முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும். இனியாவது பதவியை ராஜினாமா செய்ய அவர் தயாரா?

    பதவி கிடைக்காததால் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். தினகரனுக்கு 21 பேர் ஆதரவு இருக்கிறது. 10 பெரியதா? 21 பெரியதா? இந்த கணக்கு கூட தெரியாமல் எடப்பாடி செயல்படுகிறார்.

    டி.டி.வி.தினகரன்தான் கட்சியை நடத்த தகுதியான தலைவர். அதை விட்டுவிட்டு இவர்கள் கூட்டணியில் கட்சி எடுபடாது. தினகரனை எதிர்ப்பவர்கள் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா?

    தினகரன் துணிந்து முடிவு எடுத்தால் எடப்பாடி, ஓ.பி.எஸ். அவர்களுடைய ஆதரவாளர்கள் எல்லோரும் காணாமல் போய் விடுவார்கள். எனவே எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும். தினகரன் தலைமையில் கட்சியை நடத்தினால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும்.

    இப்போது நடக்கும் ஆட்சி மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளவில்லை. பதவியில் ஒட்டிக் கொண்டு இருப்பது எப்படி என்பதில்தான் அக்கறையுடன் இருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது. அதை இவர்கள் கண்டு கொள்ளவில்லை.

    எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. ஆரம்ப காலத்தில் இருந்தே இதில் நான் உறுப்பினர். ஆனால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு என்னை, பாண்டிராஜனை, தியாகுவை அழைப்பதில்லை. திருச்சி குமார் எம்.பி. என்னை காமெடி நடிகர் என்கிறார். ஒரு கட்சியில் காமெடி நடிகர் இருக்கலாம். ஆனால் கட்சியே காமெடி ஆகி விடக்கூடாது. இப்போது அதைத்தான் செய்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் கட்சி இல்லாமல் போய் விடும்.

    இவ்வாறு செந்தில் கூறினார்.

    Next Story
    ×