search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பன் ரோடு பாலத்தின் தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதல்: 100-வது விபத்து என கேக் வெட்டி இளைஞர்கள் அதிருப்தி
    X

    பாம்பன் ரோடு பாலத்தின் தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதல்: 100-வது விபத்து என கேக் வெட்டி இளைஞர்கள் அதிருப்தி

    பாம்பன் ரோடு பாலத்தின் தடுப்புச்சுவர் மீது நேற்று அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இது அந்த பாலத்தில் நடந்த 100-வது விபத்து என்று சுட்டிக்காட்டிய அப்பகுதி இளைஞர்கள் கேக் வெட்டி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
    ராமேசுவரம்:

    மதுரையில் இருந்து நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நோக்கி வந்த அரசு பஸ் பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பஸ்சின் முன் பகுதி மட்டும் சேதம் அடைந்தது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாம்பன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் போக்குவரத்து கழக அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதனிடையே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இது பாம்பன் பாலத்தில் நடந்துள்ள 100-வது விபத்து என்று கூறி கேக் வெட்டி அப்பகுதி மக்களுக்கு வழங்கி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.



    மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுநர்களிடம் பாம்பன் பாலத்தில் போடப்பட்டுள்ள சாலையின் தன்மை குறித்தும், மெதுவாக செல்லும்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பாம்பன் பாலத்தில் வழுவழுப்பான சாலையை அகற்றி விட்டு தரமான சாலை அமைக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகவே இதுபோன்று கேக் வெட்டி வலியுறுத்தியதாக அந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பாம்பன் பாலத்தில் வழுவழுப்பான சாலையை அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் தரமான சாலை அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
    Next Story
    ×