search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி அருகே என்ஜினீயர் குத்திக்கொலை - விவசாயி கைது
    X

    நெய்வேலி அருகே என்ஜினீயர் குத்திக்கொலை - விவசாயி கைது

    நெய்வேலி அருகே என்ஜினீயரை கத்தியால் குத்திக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் மேல்பாப்பனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 22). என்ஜினீயர். அதே பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 33), விவசாயி.

    ராமச்சந்திரனின் தங்கை செந்தமிழ் செல்வி (28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செந்தில்முருகன் (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதை அறிந்த ராமச்சந்திரன் தங்கை செந்தமிழ் செல்வி வீட்டுக்கு சென்றார்.

    வீட்டில் இருந்த செந்தில் முருகனிடம் எனது தங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்போது ஏன் தகராறு செய்கிறாய் என கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சத்தம்கேட்டு செந்தில் முருகனின் உறவினரான என்ஜினீயர் சிவபாலன் அங்கு சென்றார்.

    செந்தில் முருகனுக்கு ஆதரவாக அவர் ராமச்சந்திரனிடம் வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கத்தியால் என்ஜினீயர் சிவபாலனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சிவபாலன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    வீட்டில் இருந்தவர்கள் சிவபாலனை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவபாலன் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×