search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பா.ஆதித்தனார் சிலையை உடனே நிறுவ வேண்டும்: மு.க.ஸ்டாலின், திருமாவளவன் வேண்டுகோள்
    X

    சி.பா.ஆதித்தனார் சிலையை உடனே நிறுவ வேண்டும்: மு.க.ஸ்டாலின், திருமாவளவன் வேண்டுகோள்

    ஆதித்தனார் திருவுருவச் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டுமென அரசியல் கட்சி தலைவர்கள் தொல்.திருமாவளவன் மற்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் செய்தியில் கூறி இருப்பதாவது:-



    சென்னை எழும்பூரில் இருந்த ‘‘தமிழர் தந்தை’’ சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலையை அகற்றியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக சட்டப்பேரவை தலைவராக பணியாற்றிய அவரது பொன் விழா ஆண்டில் இந்த அராஜகத்தை செய்து அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையை அவமதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. உடனடியாக சி.பா.ஆதித்தனார் சிலையை அங்கே மீண்டும் நிறுவ வேண்டும். தமிழுணர்வுடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-



    தினத்தந்தி குழுமத்தின் நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தின் அருகே அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தது.

    ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் அனைத்துக்கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பெருநகர மாநக ராட்சியினர் சாலையைச் செப்பனிட வேண்டுமெனக் கூறி இரண்டு மாதங்களுக்கு மட்டும் ஆதித்தனாரின் சிலையை அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி, அங்கிருந்து அகற்றி, தினத்தந்தி அலுவலகத்தில் ஆதித்தனாரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் அவ்விடத்தில் ஆதித்தனாரின் சிலையை மீண்டும் நிறுவுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் எந்த முனைப்பையும் காட்டவில்லை என்பது வேதனையளிக்கிறது.

    வரும் செப்டம்பர்27 அன்று தமிழர் தந்தை ஆதித்தனாரின் பிறந்த நாள் என்பதால், அந்நாளில் வழக்கம்போல அனைத்துக் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்திட அணிதிரளும் நிலை உள்ளது.

    எனவே, அதற்கு ஏதுவாக, சென்னை பெருநகர மாநகராட்சியினர் அல்லது தமிழக அரசு செப்டம்பர் 25-க்குள் ஆதித்தனார் திருவுருவச் சிலையை மீண்டும் நிறுவிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×