search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் தீவிரமடைகிறது: அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம்
    X

    தமிழகம் முழுவதும் தீவிரமடைகிறது: அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி பேராசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் வகுப்புகள் நடைபெறவில்லை.
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவின் ஒரு பிரிவினர் கடந்த 7-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இது தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    இதனால் அரசு பணிகள், பாதிக்கப்படுவதோடு மாணவர்களின் கல்வியும் பாதித்துள்ளது. ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து இருந்த போதிலும் அதையும் மீறி அரசு ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரசு அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த அவர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கூடி அரசுக்கு எதிராக கோரிக்கை கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    போலீசாரின் தடையை மீறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக கல்லூரி ஆசிரியர்களும் போராட்டத்தில் இன்று குதித்தனர்.

    அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பல்கலை கழக ஆசிரியர் சங்கம் ஆகியவை போராட்டத்தில் இறங்கியுள்ளதால் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

    அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுடன் கல்லூரி பேராசிரியர்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் இன்று செயல்படவில்லை. பெரும்பாலான கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் வகுப்புகள் நடைபெறவில்லை.

    சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் நடந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து பல்கலைகழக ஆசிரியர் சங்க (ஏ.யு.டி) தலைவர் காந்திராஜன் கூறியதாவது:-

    ஜாக்டோ-ஜியோவின் போராட்டத்திற்கு பல்கலை கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு அளித்து இன்று முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பல்கலைகழக ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

    நான் மதுரையில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். எங்கள் சங்கத்தை சேர்ந்த 2500 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசு கல்லூரிகள் ஆசிரியர் சங்கமும் போராட்டத்தில் பங்கேற்கின்றன. இதனால் அரசு கல்லூரிகளில் வகுப்புகள் முற்றிலும் பாதிக்க கூடும். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றக் கூடியவர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.


    சென்னையில் பச்சையப்பா கல்லூரி, விவேகானந்தா, தியாகராயா, குருநானக் கல்லூரிகள் மாநில கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி, வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லூரி, பொன்னேரி அரசு கல்லூரி உள்ளிட்ட பெரும்பாலான அரசு கல்லூரிகள் செயல்படாது.

    மதுரை, திருச்சியிலும் கல்லூரி ஆசிரியர் ஸ்டிரைக் தீவிரமாக உள்ளது. புதிதாக பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களும், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள் மட்டும்தான் பணிக்கு செல்வார்கள். மற்றயாரும் பணிக்கு செல்ல மாட்டார்கள்.

    சென்னை பல்கலைகழகம், திருவள்ளூவர், பாரதியார், பாரதிதாசன், பெரியார் பல்கலைகழகங்களுக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் அதிகளவு பங்கேற்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் 82-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகள் 163-ம் உள்ளன. ஆசிரியர்கள் வராததால் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறினார்கள். ஒரு சில பெண்கள் கல்லூரிகள் மட்டும் இயங்கின.
    Next Story
    ×