search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
    X

    அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

    சென்னையில் நாளை நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
    சென்னை:

    அ.தி.மு.க.வின் அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் நாளை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    பொதுக்குழு கூட்டுவதற்கு பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார். ஆனால், இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அத்துடன், ‘நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்தால் வெற்றிவேலுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

    தனி நீதிபதி கார்த்திகேயன் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று மாலை விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அ.தி.மு.க. அம்மா, அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் ஒரு கட்சியே இல்லை என்று வெற்றிவேல் தரப்பில் வாதிடப்பட்டது.

    ‘தேர்தலுக்காக வழங்கப்பட்ட பெயர்களை வைத்து பொதுக்குழு கூட்டப்படுகிறது. கட்சியின் பெயர் விவகாரத்தில் முடிவு செய்யவேண்டியது தேர்தல் ஆணையம்தான். அணிகள் இணைப்பு என்பது தேர்தல் ஆணையத்தால் மட்டுமே முடியும். தற்போது நடைபெற்ற அணிகள் இணைப்பு முறையானது அல்ல’ என்றும் வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.

    அப்படியென்றால் தேர்தல் ஆணையத்தை ஏன் மனுதாரர் அணுகவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதேசமயம், டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, “கட்சி, சின்னம் என அனைத்து அதிகாரங்களும் தினகரனுக்கே உள்ளது. இரு அணிகளும் இணைந்ததை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பொதுச் செயலாளர் இல்லாதபோது துணை பொதுச்செயலாளர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. தனி நீதிபதி எங்கள் தரப்பு வாதங்களை கேட்கவில்லை” என குறிப்பிட்டார்.

    தினகரன் பொதுக்குழு உறுப்பினரே இல்லை என இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். தரப்பு கூறியது. பொதுக்குழுவில் இல்லை என்றாலும் துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் பங்கேற்க வேண்டும் என தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

    நீண்டநேர வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்ததும், தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். இரவு 9.15 மணியளவில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுவதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். எனவே, திட்டமிட்டபடி வானகரத்தில் நாளை பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

    ‘பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வந்தால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது. இதுதொடர்பான மூல வழக்கின் விசாரணை அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×