search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளுவேல் விபரீத விளையாட்டை சோதனை செய்து பார்க்கக் கூடாது: போலீஸ் அதிகாரி அறிவுரை
    X

    புளுவேல் விபரீத விளையாட்டை சோதனை செய்து பார்க்கக் கூடாது: போலீஸ் அதிகாரி அறிவுரை

    புளுவேல் விளையாட்டை சோதனை செய்து பார்க்கக்கூடாது என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.
    சிவகாசி:

    சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் “நீலத்திமிங்கலம்” (புளுவேல்) எனும் விபரீத விளையாட்டு பற்றி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    முதல்வர் நந்தகுமார் தலைமை தாங்கினார். திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா பேசியதாவது:-

    2015-ம் ஆண்டு ரஷ்யாவில் 22 வயது தத்துவவியல் மாணவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சவால்கள் நிறைந்த விபரீத விளையாட்டு புளுவேல் நவீன ஸ்மார்ட்போன் அல்லது ஆன்ட்ராய்டு செல்போனில் ஆன்லைனில் மட்டுமே இந்த விளையாட்டை விளையாட முடியும்.

    வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் மற்றும் இண்ஸ்டாகிராமில் விளையாடலாம். அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரையில் கதான் தகவல்கள், குறுஞ்செய்திகள், பாராட்டுக்கள், கடிதங்கள் அடுத்தகட்ட விளையாட்டுக்கள் என தொடர்பு கொள்வர்.

    இவற்றில் சில அதிகாலையில் அவர்கள் அனுப்பும் பேய் படங்கள் பார்ப்பது, காலை 4 மணிக்கு சுடுகாடு சென்று செல்பி எடுத்து அனுப்புதல், சுடுதண்ணீரை முகத்தில் தெளித்தல் போன்றவை.

    இதில் 49-வது நிலை கையில் திமிங்கலத்தின் படத்தை கத்தி கொண்டு ரத்தத்தால் வரைதல் போன்றவை. இதில் இணைபவரின் நெருக்கமான நபர்களின் தொடர்பு எண்கள், கீழ்த்தரமான பேச்சுக்கள், புகைப்படங்கள் ஆகியவை கொண்டு மிரட்டி அடுத்த வகை விபரீத விளையாட்டுக்களை விளையாடச் சொல்வர். அப்படி விளையாட மறுத்தால் அவர் இதுவரை செய்த காரியங்கள் மற்றும் விளையாட்டுக்களை நெருக்கமானவர்களுக்கும், பெற்றோருக்கும் தெரிவிப்போம். அல்லது பெற்றோரை கொலை செய்வோம் என மிரட்டுகின்றனர். இதன் உச்சகட்டம் 50-வது நாளில் தற்கொலை செய்ய சொல்வது.

    இந்த வீடியோ விளையாட்டில் ரஷ்யாவில் மட்டும் 130 பேர் தற்கொலை செய்துள்ளனர். சீனாவில் 100 பேர் இறந்துள்ளனர். உலகின் 10 நாடுகளில் இந்த செல்போன் விளையாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 2017-ல் மும்பையில் 14 வயது மாணவரும், மத்திய பிரதேசத்தில் 12 வயது மாணவரும் தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரும் தற்கொலை செய்துள்ளனர்.

    விபரீத விளையாட்டை தொடங்கிய வரை கைது செய்துள்ளனர். ஆனால் ஆதரவாளர்கள், இதைத்தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார்கள். உருவாக்கியவர் தனது பேட்டியில் எப்போதும் செல்போன் பேசிக் கொண்டிருப்பவர்களை கொன்றுவிட்டு சமுதாயத்தை சுத்தம் செய்கிறேன் என கூறியுள்ளார். இந்தியாவில் புதிதாக யாரும் இந்த விளையாட்டை விளையாட முடியாது.

    இதை தவிர்க்க மாணவர்கள் உள்பட ஏற்கனவே இதில் சேர்ந்தவர்கள் வெளியே வர வேண்டும். யாரும் புளுவேல் விளையாட்டை சோதனை செய்து பார்க்கக்கூடாது. பெற்றோரும், பிள்ளைகளும் ஒரே அறையில் தூங்க வேண்டும். இரவில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்வது நல்லது.

    பிள்ளைகள் பகலில் தூங்குபவர்களாகவும், மன உளைச்சலுடன் அல்லது சோர்வாகவும் இருந்தால் கண்காணிக்க வேண்டும்.

    கையில் “நீலத்திமிங்கலம்“ படம் வரைந்திருந்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும். அல்லது ஆலோசனை மையத்தை அணுகவும்.

    21 வயது வரை செல்போன் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அல்லது மிக சாதாரணமான ஆன்ட்ராய்டு இல்லாத செல்போன் பயன்படுத்தலாம்.

    மாணவர்களை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் சுற்றுலா தலங்கள், குடும்ப விழாக்கள், விளையாட்டு போன்றவற்றில் பொழுதுபோக்க ஊக்குவித்தால் இத்தகைய பிரச்சினைகள் வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாணவர் ரி‌ஷகுமார் நன்றி கூறினார். திட்ட அலுவலர் ராஜசேகரன், ராஜ்குமார், பழனிச்செல்வி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
    Next Story
    ×