search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்தது திருச்சி மாநகராட்சி
    X

    டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்தது திருச்சி மாநகராட்சி

    நீட் தேர்வுக்கு எதிராக டிடிவி தினகரன் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி அனுமதி வழங்க மறுத்துள்ளது.
    திருச்சி:

    நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி, அனுமதி வழங்க காவல்துறை மறுத்தபோதிலும், இது அமைதியான வழியில் நடைபெறும் பொதுக்கூட்டம்தான் என கூறிய எதிர்க்கட்சிகள், திட்டமிட்டபடி பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்தன.

    இதேபோல், டிடிவி தினகரன் தலைமையிலான அ.தி.மு.க. அணியும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டது. சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகில் இந்த போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து போராட்டத்தை ரத்து செய்வதாக தினகரன் அறிவித்தார்.

    இந்த நிலையில் அந்த போராட்டத்துக்கு பதில் நீட் தேர்வுக்கு எதிராக, திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்த தினகரன் முடிவு செய்து அறிவித்தார். மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. (அம்மா) சார்பில் வருகின்ற 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணியளவில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும் தினகரன் அறிவித்தார்.

    இந்நிலையில், திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்த மாநகராட்சி அனுமதி வழங்க மறுத்துள்ளது. 16-ம் தேதி வேறு ஒருவருக்கு அனுமதி தந்துள்ளதால், தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தர இயலாது என தெரிவித்துள்ளது.

    நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார். தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும்,
    சசிகலாவால் அதிகாரத்தில் அமர வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களை பழிவாங்குவதாகவும் புகழேந்தி கூறினார்.
    Next Story
    ×