search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட்டு தடைவிதிக்க மறுத்ததால் அ.தி.மு.க உற்சாகம்- பொதுக்குழு பணிகள் தீவிரம்
    X

    ஐகோர்ட்டு தடைவிதிக்க மறுத்ததால் அ.தி.மு.க உற்சாகம்- பொதுக்குழு பணிகள் தீவிரம்

    அ.தி.மு.க அம்மா, புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்து நடத்த உள்ள பொதுக்குழுவிற்கு ஐகோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டதால் திட்டமிட்டபடி நாளை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியும் கடந்த மாதம் இணைந்தன. இதனால் ஆளும் அ.தி.மு.க. ஒரே இயக்கமாக மீண்டும் உருவெடுத்துள்ளது.

    அ.தி.மு.க. அணிகள் இணைப்பைத் தொடர்ந்து ஆட்சியும், கட்சியும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கைக்கு சென்றுள்ளது. இதை விரும்பாத சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 21 பேரை பிரித்து மைசூரில் தங்க வைத்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி அரசு 114 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை மட்டுமே பெற்று மெஜாரிட்டியை இழந்து விட்டதாக சர்ச்சை நீடிக்கிறது.

    இந்த நிலையில் சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து முழுமையாக விலக்கி வைக்கவும், தேர்தல் கமி‌ஷனால் முடக்கப்பட்ட அ.தி.மு.க. பெயரையும், கட்சி சின்னமான இரட்டை இலையை மீட்டெடுக்கவும் எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தடுக்கும் முயற்சிகளில் டி.டி.வி.தினகரனும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கு மட்டுமே பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் உள்ளது என டி.டி.வி அணியில் உள்ள வெற்றிவேல் எம்.எல்.ஏ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட தடைவிதிக்க முடியாது என்று கூறி நீதிபதிகள் வெற்றிவேலுவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி வெற்றிவேலுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் அதிர்ச்சி அளித்தனர்.

    நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு மகிழ்ச்சியையும், டி.டி.வி தினகரன் தரப்பினருக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

    நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் மும்முரமாக் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 95 சதவிகிதம் பேர் சென்னைக்கு ஏற்கனவே வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இணை கமி‌ஷனர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார். அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


    பொதுக்குழு உறுப்பினர்களை தவிர வேறு யாரையும் மண்டபத்துக்குள் அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டையை காட்டிய பின்னரே பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இதே போல ஸ்ரீவாரு மண்டபத்தையொட்டியுள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்காக இதே மண்டபத்தில் கூட்டம் நடத் தப்பட்டது. அப்போது போடப்பட்டிருந்ததை விட பலமடங்கு அதிக பாதுகாப்பு நாளைய பொதுக்குழு கூட்டத்துக்கு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×