search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க விழிப்புணர்வு யாத்திரை: பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்
    X

    குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க விழிப்புணர்வு யாத்திரை: பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்

    குழந்தைகள் மீதான பாலியல் கொடுமையை தடுக்க கன்னியாகுமரி - டெல்லிக்கு விழிப்புணர்வு யாத்திரையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

    கன்னியாகுமரி:

    மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

    நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகள் கடத்தல் போன்றவற்றை தடுக்கவும் அதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை யாத்திரை நடத்தவும் கைலாஷ் சத்யார்த்தி திட்ட மிட்டார்.

    அதன்படி இந்த யாத்திரை தொடக்கவிழா இன்று காலை கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நடந்தது. சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய தினமான இன்று இந்த யாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு யாத்திரையை தொடங்கி வைத்தும், கைலாஷ் சத்யார்த்தியை பாராட்டியும் பேசினார். அப்போது குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடும் நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கைலாஷ் சத்யார்த்தியின் இந்த விழிப்புணர்வு யாத்திரை பாராட்டத்தக்கது என்றார்.

    கைலாஷ் சத்யார்த்தி பேசும்போது நாட்டில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் மாயமாகிறார்கள். 6 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வீதம் மாயமாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. குழந்தைகள் உரிமைகளைகாக்கவும், பாதுகாப்பான இந்தியா உருவாகவும் இந்த நெடும்பயணம் உதவி செய்யும் என்றார்.

    இதில் கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

    அதன்பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் இருந்து விழா பொதுக்கூட்டம் நடைபெறும் கன்னியாகுமரி புனித அந்தோணியார் பள்ளி மைதானம் வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது.

    இதில் நையாண்டி மேளம், மகுடாட்டம் உள்பட கிராமிய கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டான சிலம்பாட்டம் உள்பட பாரம்பரிய நிகழ்ச்சிகள் கண்கவரும் விதத்தில் இடம்பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரஜினி ரசிகர்களும் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் கைகளில் ரஜினி காந்தின் படத்துடன் கூடிய குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளையும் வைத்திருந்தனர்.

    இன்று கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை 22 மாநிலங்கள் வழியாக 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந்தேதி டெல்லியில் நிறை வடைகிறது.

    Next Story
    ×